புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 31, 2015

"எங் கதெ" (நாவல்) - இமையம்
இதற்கு முன்னரே வீடியோ மாரியம்மன் என்ற நூலின் வாயிலாக எழுத்தாளர் இமையத்தைப்  பற்றி அறிந்திருந்தாலும், அதன் பிறகு வாங்கிய "ஆறுமுகம்" என்ற நூலை வாசிக்காமல் கிடப்பில் போட்டிருந்தமையால் , இமையத்தின் புதிய வெளியீடான "எங் கதெ" நாவலை வாங்குவதில் சற்று தயக்கம் காட்டினேன், ஒருநாள் சந்திப்பின் போது, "தலைவரே, "எங் கதெ" வாங்கிட்டிங்களா? எல்லோரும் நல்லாருக்குன்னு சொல்றாங்க, நீங்க வாங்கவில்லை என்றால் நான் வாங்குகிறேன்" என்று சொன்ன தோழர் சீனுவை சாந்தப்படுத்தி, நான் வாங்கிவிடுகிறேன் என்று சொல்லி, அதே வாரத்தின் இறுதியில் டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கி வந்தேன்! அதன் பிறகு சில நாட்கள் கழித்து, எழுத்தாளர் அபிலாஷ், இந்து தமிழ் நாளிதழில் இந்தப் புத்தகத்தைப் பற்றி சிலாகித்து ஒரு கட்டுரை எழுதி இருந்ததை படித்ததும், வாசித்துக் கொண்டிருந்த ஒரு நூலை மூடி வைத்துவிட்டு, அந்த வெற்றிடத்திற்குள் இந்த  "எங் கதெ" யை புகுத்திக் கொண்டேன். நண்பனை சந்திக்க கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றிருந்தேன், அவன் வர தாமதமாகும் என்று தெரிந்ததும், வசதியான இருக்கையாய் பார்த்து அமர்ந்து இந்நூலை வாசிக்க துவங்கினேன். அந்த நண்பர் வருவதற்குள் நூலில் பாதியை வாசித்து முடித்திருந்தேன். நூலின் நகர்வு அவ்வளவு விறுவிறுப்பு! சரி வாருங்கள் கதைக்குள் செல்வோம்!

பொதுவாக அடுத்தவர்களின் அந்தரங்கங்களை அறிந்து கொள்வதில் இருக்கும் அலாதி வேறெதிலும் இருக்காது, அப்படியொரு தீவிரம் காட்டுவார்கள் நம்மவர்கள், இந்த நம்மவர்களில் அடியேனும் அடக்கம்! அப்படியான ஒரு தனி நபரின் அந்தரங்கம் தான் கதையே! முதல் நான்கு பக்கங்களை வாசித்தாலே போதும் கதையின் வடிவத்தை யூகித்து விடலாம். சில நேரங்களில் கதையின் விறு விறு நகர்வை வட்டார எழுத்து நடை சிதைத்து படிக்கிற ஆர்வத்தை குறைத்து விடும். அப்படியொரு நாவல் ஒன்று எனது புத்தக அடுக்கில் மூன்று வருடங்களாக தூங்கி கொண்டிருக்கிறது. நல்லவேளை அம்மாதிரியான சிக்கல் இந்த புத்தகத்திற்கு இல்லை. கடலூர் வட்டார வழக்கில் புனையப் பட்டிருந்தாலும் வாசிப்பதற்கான சிக்கல்கள் ஏதுமில்லை!

விபத்தில் கணவனை இழந்துவிட, அரசின் அனுதாபத்தில் கணவனின் அரசாங்க வேலை மனைவிக்கு கிட்ட, தன் இரட்டைப் பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தன் ஊரிலிருந்து வேறொரு கிராமத்திற்கு அரசுப் பள்ளிக்கு வருகிறாள் கமலா! ஊரிலிருக்கும் இளசிலிருந்து, பெருசு வரை எல்லோரும் அவளின் கவனத்தை ஈர்க்க படாத பாடுபட , அதே ஊரில் படித்துவிட்டு வேலை கிட்டாமல், முயன்று கொண்டிருக்கும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த இக்கதையின் நாயகனுக்கு கிட்டுகிறது. அதன்பின்பு குடும்பத்தை மறந்து, தங்கைகளை மறந்து, ஊரார்களை மறந்து, கடைசியில் தன்னை மறந்து இறுதியாக என்னவாகிறான் என்பதே மொத்தக் கதை. இம்மாதிரியான கதைகளையும், நிகழ்வுகளையும் அதைச்செய்யும் மாந்தர்களையும் நேரிடையாக பார்த்து வளர்ந்த சூழல் கொண்ட எனக்கு, இக்கதை பெருத்த அதிர்வை கொடுக்கவில்லை என்றாலும், உணர்வுகள் ததும்பிய எழுத்து நகர்வு மனக் கிளர்ச்சியை தூண்டுகிறது.

அச்சை வைத்து இயங்கும் சக்கரத்தைப் போல, கமலாவை சுற்றி தான் கதை நகர்கிறது. தன்னோட 28 வது வயதில் அவளிடம் தன்னை தொலைக்கிறான், 38 வயதில் தெளிவு பெறுவதாக முடித்திருக்கிறார். கமலாவை மிகத் தெளிவான பாத்திரமாக புனைந்து, அவளின் காலில் விழுந்து கிடக்கும் நாயை போல நாயகனை புனைந்திருப்பது அதகளம்! தனக்கே தனக்கு சொந்தமாக இருந்தவள் திடீரென பணி இடமாறுதலாகி போன இடத்தில் வேறொருவனிடம் வழிவதாக அமைத்து, இவனின் நிலை என்ன? இத்துணை வருடங்களாக என்னவாக இருந்தோம் என்ற சுய புரிதலை துவக்கி வைப்பது தான் எதார்த்தத்தின் உச்சம்!

ஓரிடத்தில் அவன் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான், அவனுக்கு குடும்பத்திலும், சமூகத்திலும் என்ன மாதிரியான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பதை தெரிய வைக்க, ஒரு நிகழ்வை சொல்லியிருப்பார். அதுதான் என்னைக் கவர்ந்த அம்சம். கமலாவிடம் அவமானப் பட்டு, அதன் விரக்தியில் வந்து வீட்டின் கொட்டகை கட்டிலில் குப்புற கிடக்கையில், ஊரிலிருந்து வந்திருந்த தங்கச்சிகளின் பிள்ளைகள் வந்து பொங்கல் காசு கொடு மாமா என்று கேட்கையில் பாக்கெட்டில் பத்து பைசா இல்லாமல் அவன் தவிக்கும் தவிப்பைக் கண்டு பசங்களை விரட்டிவிட்டு அவனின் அம்மா பாக்கெட்டில் பணம் வைப்பதும், அவனின் தங்கைகள் சும்மா பாக்கெட்டை செக் செய்வது போல் ஆளுக்கு கொஞ்சம் பணம் வைப்பது போல் வைத்து அந்தக் காட்சி கண்ணெதிரே வந்துப் போகுமளவிற்கு எழுத்தில் அனல் காட்டியிருப்பார் திரு. இமயம்.

ஊடாக, கமலாவின் கணவன் பின்புலத்தையும், அவரின் போராட்ட மனப்பான்மை பற்றியும், இவனை சித்தப்பா பையன் ஒருவனைக் கொண்டு இவனின் செய்கைகளை எடுத்துரைத்து இதெல்லாம் தவறு என்று சொல்வதாகவும், எல்லாவற்றிற்கும் ஒரே பதிலாக நான் கமலா எனும் கடலினும் விழுந்து கிடக்கிறேன், தப்பென்று தெரிந்தும் அதிலிருந்து மீள மனமில்லாமல் கிடக்கும் ஒருத்தனின் வாழ்வை சினிமாவாக கண்ட திருப்தியை கொடுக்கும் இந்த நாவலை வாசித்து முடித்தால்!

இந்த மாதிரியான வகையறா கதைகளுக்கு முடிவு என்னவாக இருக்குமென்று யூகித்திருந்தாலும் கதையின் நகர்வு அதை மறைத்து விடுகிறது. தான் சொல்ல வந்ததை அறுபது எழுபது பக்கங்களில் சொல்லிவிட்டாலும், சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே பக்கங்களை இழுத்தது சற்று இழுவையாக இருந்தது. இப்படி சின்ன சின்ன தொய்வுகளை தவிர்த்து விட்டு பார்த்தால் இந்த "எங் கதெ"   எல்லோருக்குமான கதை தான்!

இவரின் முந்தைய படைப்பான வீடியோ மாரியம்மன் பற்றி வாசிக்க இங்கு கிளிக்கவும்

========================================================================

புத்தகத்தின் பெயர்: எங் கதெ (நாவல்)
வெளியீடு: க்ரியா
ஆண்டு: 2015
பக்கங்கள் : 110
விலை : 110/-
புத்தகம் கிடைக்கும் இடம்
க்ரியா
புது எண் 2, 17ஆவது கிழக்கு தெரு,
காமராஜர் நகர், திருவான்மியூர்,
சென்னை – 600 041,
தொலைபேசி எண் – 9445040529
மின்னஞ்சல்:  creapublishers@gmail.com
இணையதளம்: www.crea.in
========================================================================


நன்றி : வாசகர் கூடம் 


Post Comment

ஆகஸ்ட் 29, 2015

அது பூனையில்லையாம் ...

சென்ற வாரம்  கூட சென்றிருந்தேன்,
அப்போது அது அங்கில்லை,
புதிய வரவென்று நினைக்கிறேன்,
கொழுத்த உடற்கட்டு,
வசீகரமான முகம்,
மூக்கினை தொட்டுப் பார்க்கவேண்டுமென்ற
தவிப்பினை ஏதோ ஒன்று தடுத்தது!
பார்க்கிறேன் என்று தெரிந்தும்,
ஏளனமாக என்னைப் பார்த்துவிட்டு
சன்னலுக்கு வெளியே முகத்தை திருப்பிக் கொண்டது!
அதன் பிறகு,
அதைப் பார்க்க கூடாது என்றெண்ணி
ஆறேழு முறை பார்த்துவிட்டேன்!
வழக்கமாய் ரெண்டொரு வார்த்தைகள்
பேசிச் செல்லும் தோழியின் அப்பா
இன்று ஏனோ என்னிடம் பேசாமல் போனது
வருத்தமாக இல்லையென்றாலும்
சங்கடமாக இருந்தது!
தேநீர் கொடுக்க வந்த தோழியின் அம்மா
சன்னலோரம் அமர்ந்திருந்த அதைப் பார்த்து
புன்னகைத்தது அழகாக இருந்தது!
குளித்துவிட்டு வருவதாக சொல்லிச் சென்ற தோழி
சரியாக நாற்பத்தியேழு நிமிடங்கள் கழிந்து வந்தாள்!
பொலிவான முகம்
மலிவான ஒப்பனைகளினால்
சிவந்திருந்தது!
பூசிய நறுமணத்தோடு
சோப்பின் வாசமும் நாசியை நெரிக்க
வந்து அமர்ந்த தோழியைப் பார்த்து
எப்போதுலிருந்து பூனை வளர்க்கிறீர்கள் என்று
கேட்டதும்,
கூடத்தை கடந்த
அவளின் அம்மா  நின்று என்னை முறைக்க,
அப்பா நகைத்துக் கொண்டே உள் சென்றார்!
என் கிட்டுவை, பூனையென்று எப்படி சொல்லலாம் என்று
திட்ட ஆரம்பித்த தோழியை கண்டு கொள்ளாமல்
வெளியேற கிளம்புகையில்
அந்தப் பூனை ஓடிவந்து,
வாஞ்சையுடன்
என் காலுக்குள் புகுந்து வெளியேறியது!  

Post Comment

ஆகஸ்ட் 19, 2015

சுடு சோறு!


எப்போது அந்தப் பழக்கம் அவனை தொற்றிக் கொண்டது என்று இதுநாள் வரை யாருக்கும் தெரியவில்லை. எத்தனையோ முறை கேட்டுப் பார்த்தும் யோசித்து சொல்கிறேன் என்று சொல்லி மழுப்பி விடுவான். அவனுக்கு நாங்கள் வைத்திருக்கும் பெயர் "சுடு சோறு". நாங்கள் என்றால் நான், ரூபக், மெக்னேஷ், சீனு, மற்றும் ஆவி. நான் மட்டும் அவனுடன் எட்டாம் வகுப்பிலிருந்து கூட படித்து வருபவன், மற்றவர்கள் கல்லூரி சேர்ந்த பின்பு கூட்டணியானவர்கள். அவனை முதன் முதலில் சுடு சோறு என்று அழைத்தது ரூபக் என்று தான் நினைக்கிறேன்.முன்பெல்லாம் சுடு சோறு என்று அழைத்துவிட்டால் போதும் முசு முசுவென்று கோபம் பொத்துக் கொண்டு வரும், இப்போதெல்லாம் அப்படி அழைத்தால் வெறும் சிரிப்போடு கடந்து விடுவதினால் அவ்வாறு அழைப்பதில் இருந்த அலாதி வெகுவாக குறைந்துவிட்டது. அவனுக்கு முப்பதை தொட இன்னும் ஐந்து நாட்கள் இருக்கிறது. நல்ல நெடு நெடு வென வளர்ச்சி, மெலிந்த தேகம் என்றாலும் சற்று தொப்பை வெளித்தள்ளியிருக்கிறது. மேல் வரிசை பற்களில் ஒன்று வெளித்தள்ளி இருக்கும், அது தான் அவனுக்கு அழகே, ஆனால் தனது மொத்த அழகையும் இந்த ஒற்றைப் பல் கெடுப்பதாய் அடிக்கடி நொந்து கொள்வான். இதுதான் உனக்கு அழகு என்று எவ்வளவோ சொல்லியும், கிண்டல் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.

லொட லொடவென்று பேசிக்கொண்டு இருந்தவன் தான், ஒருமுறை பனிரெண்டாம் வகுப்பில் தோழியொருத்தியை கிண்டல் பண்ண முற்பட்டு, அவள், எல்லோர் முன்னிலையில் வைத்து இவனை சராமாரியாக கலாய்த்து விட, அன்றிலிருந்து என்னிடம் கூட அளவோடு பேசிவருகிறான். பெண்களென்றால் சுத்தமாக பேசுவது கூட இல்லை. பிறகொரு பொழுதில் அந்த தோழி வந்து வருத்தம் தெரிவித்தும் அவளிடம் கூட பேசாமல் தவிர்த்து விட்டான். கல்லூரி சேர்ந்த இரண்டாம் வருடத்திலிருந்து எங்கள் வட்டத்துடன் மட்டும் கொஞ்சம் கல கலப்பாக பேச ஆரம்பித்திருக்கிறான், ஆனால் வகுப்புத் தோழிகளுடன் பேசுவதை இன்றுவரை தவிர்த்து வருவது பெருத்த ஆச்சர்யம் தான்.

ஒருமுறை, யார் யாருக்கு என்ன பிடிக்குமென்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வெரைட்டியை சொல்லிக் கொண்டிருக்க, சுடு சோறு பிடிக்குமென்று சொன்ன அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாலும் நக்கலடிக்கிறான் என்று பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. ஒருமுறை கல்லூரி கேண்டினில் அப்போது தான், வடித்துக் கொண்டு வந்து பரிமாறிய ஆவி பறக்கும் சுடு சாதத்தை, நாங்கள் ஆற வைத்துக் கொண்டிருக்க, அவன் உண்டு முடித்து இன்னொருமுறை, சாதம் கொண்டு வாருங்கள் என்று கடை ஊழியனிடம் சொன்ன போது தான் அவன் உண்மையிலையே சுடு சோறுதான் என்று விளங்கியது!

இவனிடம் இருந்து எப்படியாவது சுடு சோற்றின் ரகசியத்தை கறந்து விட வேண்டுமென்று, ஆவி, திட்டமிட்டு நாங்கள் அனைவரும் உற்சாக பானம் அருந்த கடைக்குச் சென்றோம். ரெண்டாவது சுற்று முடிந்து மூன்றாவது சுற்றின் இறுதியில் மெல்ல சீனு ஆரம்பித்தான். முதலில் சொல்ல தயங்கியவனை மெல்ல தேற்றி சொல்ல வைத்தோம், அவன் சொன்னது என்னவெனில்...

டேய் மச்சி,.. உங்களுக்கெல்லாம் எப்படியோ தெரியலை, எனக்கு சுடு சோறென்றால் அவ்வளவு பிரியம், சுடு சோறு மட்டும் இருந்துவிட்டால் போதும், சாம்பார், ரசம், கூட்டு பொரியல் கூட தேவையில்லை, வெறும் வடிச்ச கஞ்சியை வைத்தே சாப்புட்டு முடித்துவிடுவேன் அந்த அளவிற்கு சோற்றின் மீது பித்து. சுடு சாதத்தின் ருசியை அறிய இலையில் சாப்பிட வேண்டும் மாப்ளைகளா ..."என்னடா சொல்றே" என்று வினவிய ரூபக்கை கை காட்டி அமர்த்திவிட்டு தொடர்ந்தான்.

சுட சுட சாதத்தை வாழையிலையில் அள்ளி வைத்தால், சூட்டினை தாக்கு பிடிக்க முடியாமல் இலையும் சற்று வெந்து கறுத்துப் போகும், அதோடு சாம்பார் கலந்து பிசைந்து சாப்பிட்டால் தேவலோக சுவையை தரும் டா என்றான், கண்களை அகல விரித்தபடி.

நம்ம முன்னவர்கள் வைத்தியத்திற்காக இலைகளில் சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்தாலும், எனக்கு அது தரும் மணத்திற்காகவே இலைகளில் சாப்பிட பிடிக்கும். தாமரை, தேக்கு இலைகளில் சாதத்தை சாப்பிட்டர்வகளுக்கு மட்டுமே தெரியும் சோற்றின் சுவை. உங்களில் எத்தனை பேர் இலைகளில் சாப்பிட்டிருப்பீர்கள் என்று தெரியவில்லை, அப்படியே சாப்பிட்டிருந்தாலும் இப்படி ரசித்து ருசித்திருப்பீர்களா என்பது சந்தேகமே என்று எங்களை நோக்கியவனை, பேச்சை திசை மாற்ற முயற்சித்தோம், இருந்தும் விடாமல் தொடர்ந்தான். அப்படி இலைகளின் மீது பிரியமுள்ள எனக்கு சுடு சோறென்று பெயரே வைத்து விட்டார்கள் என்று சுடு சோற்றின் ரகசியத்தை அந்த மதுக் கூடத்தில் வைத்து உடைத்தான். ஆவி, ஏதோ சொல்ல அப்படியே பேச்சு திசை மாறி கிளம்பி வந்தோம்.

கல்லூரி முடிந்ததும், இலை விரும்பியான அவனுக்கு, வட இந்தியாவில் வேலை கிடைக்க, அங்கு இடம் பெயர்ந்துவிட்டான். இடையிடையே நாங்கள் அனைவரும் சந்தித்துக் கொள்கையில் சுடு சோறும், இலையும் இல்லாமல் முடியாது எங்களது பேச்சு.

சுடு சோறுக்கு நாளை கல்யாணம், வட இந்திய பெண்ணை காதலித்து மணக்கப் போகிறான். முதல் நாள் கல்யாண வரவேற்பில், வட மற்றும் தென்னிந்திய உணவுகளை கலந்து கட்டி பிரமாதமான விருந்து வழங்கினார்கள், என்ன, இலைக்குப் பதிலாக, காகித இலையில் விருந்து படைத்தார்கள்....

  

Post Comment

ஆகஸ்ட் 08, 2015

சண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்நையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்குனர் பாலாவின் தயாரிப்பு என்றதும் இன்னும் கொஞ்சம் எதிர்பார்ப்பு எகிறியதும் உண்மை தான். பெரிய சறுக்கல் கொடுத்தாலும் அதிலிருந்து மீண்டு வரக்கூடிய திறமை சற்குணத்திடம் இருப்பதாக நம்பிய என்னை, அப்படில்லாம் நம்ப படாது என்று மீண்டுமொரு மகா குப்பை படத்தை கொடுத்திருக்கிறார். தோல்வி படம் கொடுக்கலாம் தப்பில்லை, ஆனால் இப்படியொரு தோல்வி படத்தை கொடுக்க கூடாது திரு. சற்குணம் அவர்களே!  
கச்சிதமாக திரைக்கதை உங்களுக்கு செய்ய தெரியும் என்று நம்பிக் கொண்டிருந்த எங்கள் எண்ணத்தில் பெருத்த அடியை கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறீர். எந்த இடத்திலும் படத்தோடு இணைந்து கொள்ள முடியாமல் தவித்த தவிப்பு எனக்கு மட்டும்தான் தெரியும். மூன்றாம் தர இயக்குனர்களின் படங்கள் கூட கச்சிதமான கட்டுக்குள் இருக்கிறது உங்களது படம் எவ்வித இலக்குமின்றி எங்கோ துவங்கி எங்கோ முடிகிறது. ஒரு காட்சி கூட மனதில் அழுத்தமாய் பதிய மறுத்து தனித்தே நிற்கிறது. குறிப்பாக காதல் காட்சிகள் அனைத்தும் மொக்கை தான். 

இத்துப் போன பொங்கல் விளையாட்டுப் போட்டிக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் பாதியை, படத்தின் மைய கருவான ரெண்டு ஊரின் குளத்து பிரச்சினைக்கு கொடுத்திருந்தால் கூட படம் ஓரளவு அதன் பாதையில் பயணித்திருக்கும். எப்ப பார்த்தாலும் மோடு முட்டிக சண்டை போட்டுக் கொண்டு திரியும் ஊர்க்கார பயலுகள, நம்மாளு நாயகன் கடைசியில நாலே நாலு வசனம் பேசியதும், ஊரானுங்க கர்நாடாக காவேரித்தண்ணி மேட்டர பேசுற அளவுக்கு புத்திசாலியா ஆக்கின உங்க நரித்தந்திரத்தைக் கண்டு வியக்குறேன் ஜி!

அப்புறம் காதலிகிறாளா இல்லையா என தெரியாமலையே ஆப்பிள் போனை வாங்கி கொடுத்துவிட்டு, ஹீரோ பழைய சைக்கிளில் ஊரை வலம் வருவது கண் கொள்ளா காட்சி! கம்பீரமா திரிஞ்ச மில்லுக்காரனை கடைசியில் இப்படி காட்டுவீங்கன்னு யாருமே நினைச்சி கூட பாக்காத டிவிஸ்ட். அதுக்கு அப்புறமும் கொடுத்தீங்க பாருங்க அஞ்சாறு கிளைமேக்ஸ் சாமீ இதுதான் படைப்பின் உச்சம். 

தேர்ட் அம்பையர், ஒரு கையில்லாத மனிதர் கடைசியாக தண்ணீர் அள்ளி பருகுவது, பொங்கல் கொண்டாட்டம் இப்படி சின்ன சின்ன சுவாரிசயம் தவிர்த்து படம் சின்ன கிச்சு கிச்சை கூட மூட்டவில்லை.

சொந்த ஊரில் படம் எடுத்துவிட்டு, ஊர்க்காரர்களை பயன்படுத்தாம போனா சாமீ குத்தம் வந்துடும்ன்னு, பல ஆட்கள் சினிமாவுக்கே பழகாத முகத்தை பயன் படுத்தியது சிறப்பு, அதைவிட சிறப்பு அவர்கள் டையலாக் பேசுகையில் முகத்தை காட்டாமல் போனது.   

இந்த மாதிரி சவ சவ என்று நகர்ந்து கதைகளை தூக்கி பிடிப்பது பாடல்கள், அதையும் எந்த இடத்தில் பாடலை வைக்க வேண்டுமென்று தெரியாமல் தேவையில்லாத இடத்தில் பாடல் வைத்த உணர்வை தந்தது எனக்கு மட்டுந்தானா என்று தெரியவில்லை. இட்லிக் கொத்து மாதிரி இம்புட்டு பொத்தலா சினிமா எடுத்ததுக்கு எதுக்குன்னே இத்தன உதவி இயக்குனர்கள் இந்த படத்துல வேலை செஞ்சாங்க? அவசரத்துல எடுத்த படம் மாதிரி தெரியல, தல கணத்துல எடுத்த மாதிரி இருந்தது.

கடேசியா ஒரே ஒரு கேள்வி, எதுக்கு பாஸ், சண்டி வீரன்னு தலைப்பு வைச்சிங்க அதை மட்டுமாவது நியாயப் படுத்துங்க உங்களுக்கு புண்ணியமா போவும்? 

  

Post Comment

ஆகஸ்ட் 04, 2015

ஆட்டம் - சு. வேணுகோபால்
"பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்ற பழமொழி, படைப்பாளிகளுக்கு குறிப்பாக எழுத்தாளர்களுக்கு பொருந்தவே பொருந்தாது என்பதை மிகத் தீவிரமாக நம்புகிறவன் நான், ஏனெனில் முதல் முறை சறுக்கி, பின் வீறு கொண்ட எழுந்த பலரின் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். ஒரு கதையில் சொதப்பினாலும் மறு கதையின் மூலம் வாசகனின் ஆதர்சனாக முடியும் ஆகையால் ஒரு சோறு பதம் இங்கு எடுபடாது என்றே நம்புகிறேன். ஆனால் திரு. சு. வேணுகோபாலின் எழுத்தை கண்ணை மூடிக்கொண்டு சேர்த்துவிடலாம் ஒரு சோறு பதத்திற்குள். நன்றாக நினைவிருக்கிறது, சென்ற தீபாவளிக்கு முந்தைய தின இரவினில் தான் திரு. சு. வேணுகோபாலின்  "திசையெல்லாம் நெருஞ்சி" என்ற நூலை வாசித்தேன், நூலை கையிலெடுத்த மூன்று மணி நேரத்திற்குள் வாசித்து முடித்துவிட்டேன். முதன் முதலில் வாசிக்கும் எவருக்கும் இவரின் எழுத்துகளை பிடித்துப் போகும் அந்தளவிற்கு விறு விறுவென நகரக் கூடிய எழுத்து.

தி. நெருஞ்சி தந்த கிறக்கத்தில், "பால் கனிகள்". "ஆட்டம்" என்று மேலும் இவரின் இரு படைப்புகளை கடந்தப் புத்தக திருவிழாவில் வாங்கி வந்திருந்தேன். அதில் "ஆட்டத்தை" வாசிக்க துவங்கினேன், ஆச்சரியம் என்னவெனில் இந்த நூலையும் ஒரே நாளில் வாசித்து முடித்தது தான். தன்னோட புத்திசாலித்தனங்களை வெளிக்கொணரும், வழியாய் புத்தகம் வெளியிடும் முறையை துவக்கியிருக்கும்  சில எழுத்தாளர்களுக்கு? மத்தியில், எவ்வித ஆடம்பரமுமின்றி, தன்னை சுற்றி நிகழ்ந்த எளிய நிகழ்வுகளையே கதைக்களனாக்கி நேர்த்தியாய் ஒரு நாவலை புனைந்திருக்கிறார் ஆசிரியர். 

சு. வே வின் படைப்பு யுக்தி ஒன்றும் புதியது என்று சொல்லிவிட முடியாது,  இவரின் படைப்புகளில் வரும் கதை மாந்தர்கள் எவரும் நம்மோடு மாறுபட்டு நிற்கவில்லை, திடீர் புத்திசாலிகளாக உருமாறி நமக்கு வகுப்பெடுப்பதுமில்லை. நம்மை விடவும் மிக எளிமையாகவே இருக்கிறார்கள், நிதர்சனத்தை துளியும் மீறுவதில்லை. கதை மாந்தர்களாக வருகிறவர்கள், கதை மாந்தர்களாகவே செல்கின்றனர். தமது பாத்திரங்கள் இயல்பினை மீறிவிடாமல் மிகத் தீவிரமாக பார்த்துக் கொள்கிறார் சு. வேணுகோபால்! இதை வைத்தே சொல்லிவிடலாம் இவருக்கு எழுத்தின் மீதுள்ள பற்றையும், காதலையும்!

கதைச்சுருக்கம்:

கபடியில் சிறந்து விளங்கிய வடிவேல், அதே ஊரை சார்ந்த கனகம் என்னும் பெண்ணை காதலிக்கிறான், இதற்கு அவனின் சக கூட்டாளிகளும் உதவுகிறார்கள், முதலில் மறுக்கும் கனகம் பிறகு ஒப்புக் கொள்கிறாள். இருவரும் வெவ்வேறு சாதியென்பதினால் ஊரை விட்டு ஓடி, பக்கத்து நகரத்தில் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள். இரண்டு பிள்ளைகளும் பிறந்து மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த வாழ்வில் திடீர் திருப்பமாக, கூட வேலை செய்யும் ஒருத்தனோடு காதல் கொள்கிறாள் கனகம், அதனையறிந்து வடிவேல் கண்டித்ததும், கள்ளக் காதலனோடு ஓடியும் விடுகிறாள். வேறுவழி தெரியாமல் மீண்டும் தான் பிறந்த கிராமத்திற்கே, தன்  பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வருகிறான் வடிவேல். அவமானம் அவனை துரத்துகிறது. பழைய படி மீண்டும் கபடி ஜெயித்து தான், பொண்டாட்டி ஏற்படுத்திய களங்கத்தை கொஞ்சமேனும் துடைக்க வீறு கொண்டு எழுகிறான், அப்படி வைராக்கியத்தோடு இருந்த வடிவேல் போட்டியில் ஜெயித்தானா ? என்பது தான் முதன்மை கதை. இதனிடையே சில கிளைக் கதைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு திருப்பத்தைக் கொடுத்தாலும் முதன்மை கதை நகர்வை துளியும் தடுக்கவில்லை.

இவரின் பலமே, எத்தனை கிளைக்கதைகளை புகுத்தினாலும் ஒவ்வொன்றுக்கும் தொடர்பிருப்பதாய் நகர்த்துவது தான். மற்றொன்று கபடி போட்டிகளின் போது நட்சத்திர வீரர், சக வீரன் கண்முன்னே வளருவதை கண்டு பொருமும் மன நிலையை அவ்வளவு நெருக்கமாய் பதிவு செய்திருப்பது. ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவன், மனைவியும் இன்னொருவனோடு ஓடிப் போய்விட, தனது விபரம் தெரியாத இரு பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவன் படும் இன்னல்களை. மனக் குழப்பங்களை, அவமானம் தரும் வலிகளை  முடிந்தளவிற்கு பதிவு செய்திருக்கிறார் என்றே நம்புகிறேன். இறுதியாக ஒரு திருப்பத்தை தந்து முடித்திருப்பது விறுவிறுப்பு!

ஆசிரியருக்கு இந்த சித்திகளின் மீது என்ன தீரா வன்மமோ தெரியவில்லை, திசையெல்லாம் நெருஞ்சியில் சித்தி காடில்யா, வரம்பு மீறி உறவு கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார், அதே மாதிரி இந்த நாவலிலும் சித்தி நாகமணி என்பவள் மகன் உறவு வரும் காளையனிடம் உறவு கொள்வதாய் சித்தரித்திருக்கிறார். அவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டினால் அவரிடம் கேட்டுவிட வேண்டுமென்ற முடிவிலிருக்கிறேன்.

இந்தப் புத்தகத்தின் அட்டைப்படமே வாங்க வேண்டுமென்ற ஆவலை தூண்டுகிறது, அந்த ஆவலை முழுமையாய் தீர்த்து வைக்கிறது உள்ளிருக்கும் எழுத்தும்.

திசையெல்லாம் நெருஞ்சி பற்றிய எனது பார்வைகளை படிக்க இங்கு செல்லுங்கள் : திசையெல்லாம் நெருஞ்சி - சு. வேணுகோபால்


=====================================================================

வெளியீடு: தமிழினி பதிப்பகம்

வருடம் : 2013 திசம்பர்

மொ . பக்கங்கள்: 120

விலை : 90/-

======================================================================

நன்றி: vasagarkoodam.blogspot.com


Post Comment