நம்மில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் நிறைய பேர் உண்டு. அதை பற்றிய சிறு பார்வை தான் இந்த பதிவு . பெரும்பாலும் அனைவரும் இரயிலில் பயணம் செய்ய விரும்புவார்கள். இப்போ உள்ள சூழலில் ரயிலில் பயணச்சீட்டு கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கும் பட்சத்தில், அதற்கடுத்த வாய்ப்பு பேருந்து தான்! பேருந்தில் பயணம் செய்து வீடு திரும்புவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதன் களிப்பும், களைப்பும்!
சாதாரண பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களின் நிலையை கண்டால் கல்லும் கண்ணீர் வடிக்கும்! அதுவும் எங்கள் பகுதி பேருந்தில் பயணிப்பவர்கள் நரகத்தை நான்கு முறை சுற்றி வந்த மாதிரி ஒரு வித விரக்தியில் தான் இருப்பார்கள்! கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள மூட்டையில் பாதி இங்கு தான் இருக்கும்! பின்பகுதி முழுதும் வெறும் மூட்டைகளாகவே நிறைந்திருக்கும்! மூட்டை எது பயணி எது என்று சில நேரங்களில் நடத்துனரே குழப்பமடைந்து பின் தெளிவார்!
இது ஒருபுறமிருக்க, கோயம்பேட்டிலிருந்து செல்லும் பேருந்துகளில் பெரும்பாதி விழுப்புரத்திற்கு முன்பு உள்ள விக்கிரவாண்டி அருகே உள்ளே ஹோட்டல்களில் நிற்கும்! அங்கு உள்ள உணவகங்களின் தரம் பற்றி நானூறு பதிவு எழுதலாம்! இரவு நேர பயணத்தில் பெரும்பாலனவர்கள் அங்கு உண்பதில்லை, பகல் நேர பயணிகளின் தலை எழுத்தை யாராலும் மாற்ற முடியாது!
அங்கு உள்ள கழிப்பிடங்களின் நிலை கண்டு இந்தியனாய் பிறந்ததிற்கு வெட்க பட தூண்டும்! பெட்ரோல் விலை ஏற்றத்தை போல் இவர்களும் நாளுக்கு நாள் ஏற்றிக்கொண்டு வரும் பயணிகளின் வயிற்றை வாயிலிலே கலக்கி உள்ளே அனுப்புகின்றனர்! கொடுமை என்னவெனில் வாங்கும் காசில் ஒரு பகுதிக்காவது கொஞ்சம் சுத்தப் படுத்த கூடாதா? ச்சே என்ன ஒரு செயல்! கேட்டால் ஒரு நாளைக்கு உங்களை மாதிரி லட்சம் பேர் வந்து செல்கின்றனர் என்று சப்பை கட்டு கட்டுவார்கள்!
இதை தவிர்க்கவே பெரும்பாலான ஆண்கள் பேருந்து நின்றதுமே நெடுஞ்சாலையை நோக்கி விரைந்து விடுகின்றனர்! பாவம் பெண்களின் நிலை, வேறு வழியின்றி அந்த நரகத்தை நோக்கி நடக்க வேண்டும்!
இல்லாத வளர்ச்சியை வாய் கிழிய, பதவியில் இருப்பவர்கள் பேசும்போது தான் மண்டை கிறுகிறுக்கிறது! அவசர , அவசிய தேவை இதை கூட வழங்காத இவர்கள் எம்புட்டு வளர்ச்சி அடைந்து என்ன பயன்! அது வெறும் அதற்கு தான் சமம்! அவசிய தேவைகளான குடிநீர் , கழிப்பிட வசதி இல்லாமல் ஒரு நாட்டின் வளர்ச்சி சாத்தியமே இல்லை! அவசரமாய் ஓடும் நாம் இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் விடுவதினால் தான் இவர்களின் அராஜகம் பெருகுகின்றது! "என் தங்கம் , என் உரிமை" அளவுக்கு இல்லாமல் போனாலும், அதில் ஒரு பாதியாவது இருந்தால் நன்றாக இருக்கும்!
Tweet |