புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 30, 2013

சுமை தாங்கிகள்!



எவ்வளவோ சொல்லியும்
மணம் முடிந்த
இரண்டாம் வாரமே
இடம் பெயர்ந்தோம்
தனிகுடித்தனத்திற்காய்!

திருமணம் முடிந்த 
இரண்டு மாதத்தில்
எனக்கும் அவனுக்கும் 
இது நான்காவது சண்டை!

அவனால் மூன்று,
என்னால் இன்று!

சிறு மௌனம்,
பெரிய கிள்ளு,
இறுக்கும் அணைப்பு, 
இத்தோடு இளகிடுவோம்!


வழக்கத்துக்கு மாறாய் 
இரண்டு மணிநேரத்துக்கும்
மேலாக நீள்கிறது!
மௌனப்  பேச்சு!

இத்தனை நெருக்கத்தில் 
இவன் சும்மாய் இருந்ததில்லை 
என்னிடம்! அசையாமல் 
படுத்திருக்கிறான் 
விசிறியை வெறித்தபடி!

அவன் மௌனத்தை கலைக்க  
என் பிடிவாதத்தை தொலைத்தேன் !
அவன் சிரித்தான்!

என் பிடிவாதத்தை 
இன்றும் இரசிக்கும்  
அம்மாவும், அப்பாவும் 
என்னுள் வந்து போனார்கள்! 

சாப்பிட்டுக் கொண்டிருந்தால் 
என்னை சுமந்த  
அந்த  உயிர்களுக்கு 
நிச்சயம் புரையேறி இருக்கும்!


Post Comment

செப்டம்பர் 25, 2013

காதல்! (எனக்கு நேர்ந்த பயண அனுபவம்)


னிதருள் எத்தனை சுய விருப்பு, வெறுப்புகள் இருந்தாலும் இந்த காதல் என்ற ஒன்றின் கீழ் எப்படியாவது இணைந்துவிடுகிறான்! "காதல்" எத்தனை வலிமையான, வசீகரமிக்க ஏகாந்த சொல்! இன்றளவும் காதல் என்ற ஒன்றை நோக்கியே பெரும்பால மனித மனங்கள் சுழலுகின்றன, என்பதை அடிக்கடி ஏதாவது ஒரு வினோத செய்தி, செய்கைகளின் மூலம் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றன! சமீப காலமாக அதன் வடிவம் மாறுகின்றதே தவிர மூலமான "காதல்" இன்னும் கற்புடனே இருக்கிறது என நம்புகிறேன்!



(கேடி பில்லா இவரே தான் )



காதலை வெளிப்படுத்தி அதை முன்னெடுத்து செல்வதில் நகரத்துக்கும், கிராமத்துக்கும் சற்று மாறுதல் இருக்கிறதே தவிர, காதலில் அல்ல! என்ன நகரத்தில் சந்தித்து பேசிக்கொள்ள வாய்ப்பு எளிது, கிராமத்தில் சற்று சிரமம்! தொழில் நுட்ப வளர்ச்சியால் அதுவும் எளிதான மாதிரி தெரிகிறது! இருந்தும் சில கட்டுப்பாடுகள் நகரங்களை  விட கிராமங்களில் சற்று அதிகம்! சமீபத்தில் ஊருக்கு சென்றிருக்கையில் பேருந்தில் கண்ட ஒரு தலைக்காதல் அப்படியே உங்களுக்கும்...

அம்மிணி, கூட ரெண்டு புள்ளைங்களோட வந்து  பஸ்ல ஏறிச்சி, ஒரு கையில நோட்டு, இன்னொரு கையுல மொபைல் , கண்ணுல காதலோட ஒரு வாலிப முறுக்குடன் இளந்தாரிப்பய ஒருத்தன் ஏறினான்! அவன பார்த்த வுடனே சொல்லிப்புடலாம், காதல் வெறியில கண்டமேனிக்கு திரியுறான்னு  அப்படியொரு கள அய்யா முகத்துல! அம்புட்டும் காதல் வெறி ! சரி, மூணு புள்ளைங்க இருக்கே இதுல எது தலைவரோட ஆளா இருக்கும்ன்னு சின்னதா நோட்டம் விட்டேன். ஒரு மண்ணும் வெளங்கல! பொழுது போகணுமில்ல நடப்பதை உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்சேன்! டப்புன்னு ஒரு சந்தேகம் பய புள்ள மூனையும் ஒரே நேரத்துல கட்டைய கொடுக்குறானோன்னு! 


அங்கிட்டு மூணுல, ஓன்னுத்தான் பதினாறு வயதினிலே மயிலு கணக்கா பயல, மாவா அரைச்சுது, மத்த ரெண்டும் எந்த மாரியம்மன நெனச்சிக்கிட்டு இருந்ததோ யாருக்கு தெரியும்! எடையில கொஞ்சம் கூட்டம் கொறைஞ்சதும், ஏன்டா தம்பி நிக்குற அதான் எடம் இருக்குதுல்ல செத்த உக்காரலமுள்ள என்று பெருசு ஒன்னு சல்லைய கூட்ட (எல்லா பஸ்லயும் இப்படி ஒரு பெருசு ஏறிடும் போல, திருந்துங்க சாமிகளா !!!), நம்ம தம்பி, பெருசுக்கு பார்வையிலே பதிலச் சொல்லிட்டு பட்டைய கெளப்ப ஆரம்பிசிட்டாப்ள! வந்த வேலை முக்கியமுல்ல! 

திடிர்னு நினைவு வந்தவனாய் கையிலிருந்த கொரியன  (தான் நினைக்குறேன்) சீண்ட காதுக்கே நுழையாத இந்தியில பாட ஆரம்பிச்சிட்டாப்ள! காதல் வந்தா கண்ணு தெரியாதும்பாங்க இங்க என்னடான்னா காதும் கேக்காது போல! அங்கன மயிலும் பயலுக்கு பார்வையாலே வெறி ஏத்த பரவச நிலைக்கு போயிட்டாப்ள!  அஞ்சாறு பாட்டு ஓடியிருக்கும் அதுல ஒன்னு கூட தமிழுல இல்ல, சிலது இந்தி , இன்னொன்னு என்னா மொழின்னு வெளங்கல. இப்படியொரு சங்கீத கச்சேரி நடத்தி தான் தமிழன் என்பதை அட்சரசுத்தமாய் நிருபித்தான்! (ஆமா அவனும்  அந்த புள்ளைய பாக்குறான் , அந்த புள்ளையும் அவன  கொஞ்சுது . அப்புறம் என்னா கருமத்துக்கு? இந்த பாட்ட போட்டிருப்பான் ? இன்னும் விடை கெடைக்கல எனக்கு !!!)           

ரெண்டு பேரோட ஊரு வந்திருக்கும் போல, நாயகனும், மயிலும் இறங்கி கொள்ள பேருந்தே காலியானது போல உணர்ந்தேன்! பின்ன பொழுதுக்கும் பொழுதும் போச்சி, பதிவும் ஒன்னு தேருச்சில்ல. இதிலும் பாருங்க அவன் அந்த பெண்ணிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை, அவளும் தான்! இருந்தும் இரண்டு பேரின் முகத்திலும் ஒரு இனம்புரியா பிரகாசம்! இதுதான் காதலின் வலிமை. வேறு எந்த உறவுக்கும் கிடைத்திடாத கிளர்ச்சி, வீரியம் இந்த காதலுக்கு தான் உண்டு! காதல் எண்ணங்கள் மனதில் துளிர் விட ஆரம்பித்தாலே போதும் எத்தனை மாற்றங்கள் மனிதருள்! நல்ல காதலுக்கு கரம் கொடுத்து வலு சேர்த்திடுவோம் நண்பர்களே ! 

      

Post Comment

செப்டம்பர் 18, 2013

விலகிய துப்பட்டாவிடம் வீழ்ந்து தொலைக்கிறேன்!


இன்றோடு சரியாக
ஆறாவது முறையாக பார்க்கிறேன்!
அவளுடன் மேலும்
சில பெண்கள்
தோழிகளாக இருக்க கூடும்!

கரு நீலமும் , வெண்மையும்
கலந்த நிறத்தில் உடை ,
முடியை மிக கவனமாக
ஒழுங்கு செய்திருந்தாள்,
மை பூசியிருப்பதை
புருவங்கள் உணர்த்துகின்றன!

ஒவ்வொரு முறையும் 
கண்களை கவனிக்க முற்பட்டு
விலகிய துப்பட்டாவிடம்
வீழ்ந்து தொலைக்கிறேன்!

இன்றாவது திருத்தமாய் 
இருப்பாளென நானும்,
திருந்தியிருப்பானா? என்று அவளும்
அப்படியே தான் தொடர்கிறது 
ஏழு, எட்டு... என்று!

பண்பற்ற போட்டியினால் 
மழுங்கடிக்கபடுகிறது 
மரபும், மாண்பும்!
பல்லிளிக்கிறது 
பக்குவமற்றப் பாங்கு! 


Post Comment

செப்டம்பர் 14, 2013

ஏனெனில் நான் பதிவன் ...


எங்கு சென்றாலும் நிறைகளை விட குறைகளே கண்ணுக்கு அதிகம் தெரிவதால், ச்சே... நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற எரிச்சல்  ஏடாகூடமாக வந்து தொலைக்கிறது ! 
சொந்த வேலையாக சில இடங்களுக்கு சென்றாலும், அங்கும் நமக்கு பதிவெழுத ஏதாவது சிக்காதா என்கிற என் பூதக் கண்கள் விரியத் தொடங்கிவிடுகின்றன. 



இது ஏதாவது பயங்கர நோயாக இருக்குமோ என்று மருத்துவரை பார்த்து தெளிவு கொள்வோம் என்று அங்கு சென்றேன், அங்கு செமத்தியாக ஒரு மேட்டர் சிக்கியது (பதிவெழுத தான் பாஸ், நீங்க நினைக்குற மாதிரி இல்ல)  எம் பெருமான் முருகன் விரும்பினால் அடுத்த பதிவில் காண்போம்! 

எங்கு எது நடந்தாலும் , அதை நம்ம பத்திரிக்கைகாரர்கள் பண்ணுவதைப் போல், (அது அவங்க தொழில்? )  கவர் பண்ணுவதில் குறியாக இருக்கிறேனே தவிர, ஏதாவது எம் பங்குக்கு கேட்கணும் என்கிற துணிச்சல் சுத்தமாய் இல்லையென்று தான் சொல்லவேண்டும். 

என்னையும் மீறி ஒரு வெறி பொங்கினால் நேராக அருகிலிருக்கும் இணைய சென்டரை நாடிச் சென்று , பிளாக்கிலும், பேஸ் புக்கிலும் முறையிட்டு என் சமூக கடமையை ஆற்றிக்கொள்கிறேன்! நாலு ஸ்டேடஸ் , மூணு பதிவு தேறிய நன்றியோடு அடுத்த சமூக குறைகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விடுகிறது மனசு! 

என்னை மாதிரி ஒரு சமூக போராளியை கவனிக்காத மத்திய, மாநில அரசுகளை சில நேரங்களில் திட்ட தோன்றும், இதெல்லாம் நம் கடமை இதுக்கு போய் பலனை எதிர்பார்ப்பதா என்று ஆழ் மனசு கதறி கதறி சமாதானம் சொல்லுகையில் அமைதி கொள்கிறது மனசு ....

இம்புட்டு செஞ்சிருக்கோம், பதிலா நமக்கு இந்த இணையம் என்ன செஞ்சது என்று ஏடாகூடமா யோசிச்சு , மதிப்பற்ற இந்த பதிவுலகத்தை விட்டு விலகப் போகிறேன் என்று ஒரு பதிவை எழுதவேன், அண்டமெங்கும் நிறைந்திருக்கும் என் நலம்விரும்பிகள், தயவு செய்து விலகவேண்டாம் வேண்டுமென்றால் ஓய்வு எடுத்துக்கொண்டு வாருங்கள் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்கி இதுவரை முப்பது முறைக்கு மேல் விலகவேண்டும் என்ற எண்ணத்தை எல்லாம் மூட்டை கட்டி பரண் ஏற்றிருக்கிறேன் என்றால் என் பொறுமையை நீங்களே மதிப்பீடு செய்து கொள்ளலாம்!

எவரும் படித்திராத ஒரு புத்தகத்திற்கு விமர்சனம் எழுதி பெயர் வாங்கணும் என்று முடிவு பண்ணி மூணு வருசமா தேடிகிட்டு இருக்கேன், பழைய புத்தக கடை தாத்தா இந்த தெரு பக்கமே வந்துறாத என்பது போல் பல முறை பார்த்தாலும், நான் என்ன சாதாரணா ஆளா ? விடுவதாய் இல்லை! இந்த வருடத்தில் என் எண்ணம் ஈடேருமென்று அம்பலவாண சுவாமிகள் சொல்லியிருக்கிறார்!

ஆகவே இரசிக கண்மணிகளே கொஞ்சம் பொறுத்திருங்கள், இதுவரை யாரும் படித்திராத ஒரு புத்தக விமர்சனத்தோடும், யாரும் பார்த்திராத வித்தியாசமான சினிமா விமர்சனத்தோடும்  உங்களை இம்சிக்க விரைவில் வருகிறேன், அதுவரை அமைதியாக இருக்கும்படி உங்களை கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்! நன்றி வணக்கம்!



பி. கு.:  வலைப்பூ தொடங்கி  தொடர்ந்து பதிவு எழுதி உங்களை எல்லாம் இம்சிப்பேன் என்றும், இத்தனை நண்பர்களை சேர்ப்பேன் என்றும் சத்தியமாக நினைக்கவில்லை! இது என்னோட 200 வது பதிவு. இந்த இருநூறில் படிக்கும்படி இருந்தது வெகு சொற்பமே!  நல்ல பதிவுகளை தருவதற்கு முயற்சிக்கிறேன்! ஆதரவு அளிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகளும் , வணக்கங்களும்! 


Post Comment

செப்டம்பர் 12, 2013

இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது...


ன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது,
மனிதப் பெருக்கத்தில்
தொலைந்து போனதாய்
சொன்னார்கள்,
நானும் வேகமாய் தலையாட்டினேன்!

சொல்லி சொல்லியே
தொலைக்கப்பட்டதே தவிர, 
எவரும்
தடுக்க முற்பட்டதில்லை!



ஏழெட்டு கிறுக்கலோடு
என் கடமை முடிந்ததாய்
எண்ணிக்கொண்டேன்!

மகளோடு சேர்த்து 
எதிர்வீட்டாரின் குழந்தைக்கும், 
மார் ஊட்டும் (மாரூட்டும்)  
மஞ்சுளா அக்கா 
இன்னும் 
உயிர்ப்போடு தான் வைத்திருக்கிறாள்!

இவளைப் போல் 
இன்னும் பலர் வைத்திருக்கலாம், 
தொலைந்து போனதாய்ச் சொல்லும் 

மனிதநேயத்தை!


Post Comment

செப்டம்பர் 04, 2013

நானும், தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பும்!


சென்னையில் தொடர்ந்து இரண்டாம் முறையாக சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது தமிழ் வலைப்பதிவர்களின் சந்திப்பு! வெளியூர்களில் இருந்து நிறைய பதிவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்! திட்டமிட்டபடி விழா நிகழ்வுகள் நடந்து முடிந்ததில் மன நிறைவு... 

இந்த வருட சந்திப்பில் நிறைய நண்பர்களை காணவேண்டும் என்றும், அவர்களோடு பேசவேண்டும் என்று பெரிய பட்டியல் வைத்திருந்தேன், அனைத்தும் தவிடு பொடியாகின! உங்களோடு பேசமுடியாமல் போனதற்கு என்னை மன்னியுங்கள் தோழமைகளே! 

இந்த சந்திப்பு சில இனிய தருணங்களை வழங்கியது! குறிப்பாக சிறப்பு விருந்தினர்களோடு சில மணித்துளிகள் உரையாட வாய்ப்பு கிடைத்தது! ஒவ்வொருவருக்குள்ளும் எவ்வளவு எளிமை பொதிந்துள்ளது என்பதை, அவர்களோடு நெருங்கி பேசுகையில் புரிகிறது! அவர்களின்  எழுத்துக்கள் போலவே  அவர்களும் வெள்ளந்தி மனிதர்கள்!

உற்சாகமான ஒரு நாள் முழுதையும் பதிவர்களோடு செலவிட்டது மன நிறைவை தருகிறது! எதையும் பாராமல் இணையம், தமிழ் என்ற ஒன்றுக்காக ஒரு கூரையின் கீழ் குழுமியது ஆனந்தத்தில் திளைக்க வைத்துவிட்டது!

விழா என்று ஒன்று வந்துவிட்டால் அதில் சில குறைகள் இருக்கத்தான் செய்யும், அதை மன மகிழ்வுடன் பொறுத்துக்கொண்ட தோழமைகளுக்கு எங்களின் மனம் நிறைந்த நன்றிகள்!


(சிறப்பு உரைக்கு முன்)




(எழுத்தாளர் பாமரனுடன் நான்!)




(திரு. கண்மணி குணசேகரன் அவர்களோடு )



(விழாவிற்காக உழைத்த தோழர்கள் - சிலர் விடுபட்டுள்ளனர் )



(திரு. சதீஷ் செல்லத்துரை மற்றும் வெற்றிவேல்)


காமெடி கும்மி நண்பர்கள் பலரை சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது! என்ன நேரம்தான் இல்லை அவர்களோடு கொஞ்சம் பேசி மகிழ!தோழர்களே என்னை மன்னிக்க!

இன்னும் எழுதநிறைய இருக்கிறது தேவைப்பட்டால் சரியான நேரத்தில் இன்னொரு பதிவில் மிக தெளிவாக சொல்கிறேன்!

முடிவாக அனைவரும் கிளம்பிய பிறகு அவரவருக்கு கொடுத்த பணியோடு எதிர்பாராமல் சற்று சுமை கூடினாலும்  திறம்பட செய்து முடித்த மன நிறைவோடு நான், சீனு மற்றும் ரூபக் மூவரும் அவரவர் இல்லம் நோக்கி நகர்ந்தோம்! 


Post Comment