புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 27, 2012

கண்கொத்திப் பறவை...(பதிவரின் நூல்)



நம்மில் பலர் தொடர்ந்து வலைப்பூவில் எழுதி வந்தாலும், வெகு சிலரே அதை தொகுத்து புத்தகமாக்குகின்றனர், அந்த வரிசையில் நமது சக பதிவர், என் மனதிற்கினிய அண்ணன் மனவிழி சத்ரியன் அவர்கள் தனது கவிதைகளை தொகுத்து "கண்கொத்திப் பறவை" என்கிற பெயரில் முதல் தொகுப்பாக  வெளியிட்டுள்ளார். அவ்வப்போது ஒன்றிரண்டு கவிதைகளை வலைத்தளத்தில் வாசித்தாலும் மொத்தமாய் ஒரு புத்தகமாய் படிக்கும் சுகமும், சுவையும் தனிதான். 


நடுநிசியில் மனம் மயக்கும் மெல்லிசை போல், உள்ளம் நிறைக்கும் காதல் ராகம் இதில் நிறைய பாடியிருந்தாலும், கூடவே சமூகம் பற்றிய தன் கோபங்களை 'வரி'ச் சாட்டைக்கொண்டு சுழற்றி இருக்கிறார். எளிய தமிழில் புதுக்கண்ணோட்டத்தில் புனையப் பட்ட மென்மை கவிதைகள் மனதை வசீகரிக்கின்றன. இந்த புத்தகத்தை சிறப்பாக வடிவமைத்திருப்பவர் நம் நண்பர் மின்னல்வரிகள் திரு. பால கணேஷ் அவர்கள்.  புலவர். ராமானுசம் அய்யா அணிந்துரை வழங்கி புத்தகத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளார்.

புத்தகத்தை வாங்கி வாசித்து கவிஞரின் முயற்சிக்கு ஊக்கம் அளியுங்கள் தோழமைகளே!

புத்தகம் கிடைக்குமிடம்:-

Discovery Book Palace Pvt Ltd.,
K. K. Nagar, Chennai - 600 078. (near Pondichery Guset House)
Ph: 044 - 6515 7525  www. discoverybookpalace.com

ஆன்லைனில் வாங்க இங்கு கிளிக்கவும் 

Post Comment

டிசம்பர் 22, 2012

சிவராத்திரி கொண்டாடிய பதிவர் ...



முக்கிய பணி நிமித்தமாக என் சொந்த ஊருக்கு செல்ல வேண்டி இருந்தமையால் அவசர அவரமாக எனது வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று ஒரு வாரத்திற்கு தேவையான துணிகளை அள்ளிக்கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சீறியது என் பயணம் ... சாப்பிட கூட நேரமில்லை. திடீரென்று எடுத்த முடிவு .



ஒருவழியாக கோயம்பேடு வந்து சேர்கையில் இரவு 10 மணி, இறங்கி எங்க ஊருக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் நடைமேடை நோக்கி விரைந்தேன், வெறிச்சோடி கிடந்தது, இன்னைக்கு ஊருக்கு போனது மாதிரி தான் என்று எரிச்சலில் அருகில் ஏதோ கேட்க வந்த முதியவரிடம் கூட சரியாக பதில் சொல்லவில்லை. (இல்லைனா மட்டும்). 

சரியாக 11 மணிக்கு ஒரு தகரடப்பா பேருந்து இருமிக்கொண்டு உள்ளே நுழைந்தது வரும்போதே ஏகப்பட்ட நெரிசல். இங்கு நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டிய பேருந்து வரும்போதே மூச்சடைக்கும் அளவுக்கு கூட்டத்தோடு வந்தது மேலும் எரிச்சலூட்டினாலும் இதை விட்டால் இனி காலையில் தான் அடுத்த பேருந்து என்ற நினைவு எப்படியோ ஏறி ஊர் செல்லவேண்டும் என்று எச்சரித்தது. உள்ளே சென்று பார்த்தால், சென்னையின் மொத்த குப்பையும் இங்கு தான் கொட்டியிருப்பது போன்ற உணர்வை தந்தது.

என்ன செய்ய இன்னைக்கு நாம இப்படித்தான் ஊருக்கு போகணும் என்று இருக்கு என்று நொந்துகொண்டே இருக்கையை தேடினேன், பேருந்தின் கடைசி இருக்கையில் ஒரு இடம் காலியாக இருந்தது, கொஞ்சம் தயக்கம் இருந்தும் எதையும் யோசிக்காமல் சென்று அமர்ந்து கொண்டேன். பேருந்து நகர ஆரம்பித்தது. நடத்துனர் பயணச்சீட்டு கொடுக்க ஆரம்பித்தார் அவரின் செய்கையும் பேச்சும் மிகவும் கீழ்த்தரமாக இருந்தது. பைல்ஸ் வந்தவர் போல அடிக்கடி பயணிகளிடம் எரிந்து விழுந்தார். எல்லாத்துக்கும் போராட்டம் நடத்தும் தொழிற்சங்கங்கள் இதையும் கொஞ்சம் கவனித்தால் நலம். 

சரி சதி செய்யும் விதியை என்ன செய்வது என்று நொந்து கொண்டே சரி சற்று நேரம் கண்ணை மூடலாம் என்று எத்தனிக்கையில் "அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்" என்று வீரிட்டது சீனா தயாரிப்பு கைப்பேசி ஒன்று, இன்னொரு பக்கம் "அடிடா அவளை" என்று கதறியது. இந்த பெருத்த இம்சைகளுக்கு மத்தியில் எப்படி உறங்குவது விடிய விடிய சிவராத்திரி தான். 

தன் சந்தோஷம் தான் முக்கியம் என்று அடுத்தவன பற்றி கவலை படாத சமூகத்திற்கு நாம் மாறிவிட்டோம், இதை எண்ணினால் எவ்வளவு வெட்கமாக இருக்கிறது, வருகிற ஒவ்வொரு அரசாங்கமும் மக்கள் நலனில் அக்கறை கொண்டது மாதிரியான நாடங்களை நடத்திவிட்டு, நான்கு இலவசங்களை திணித்து விட்டு முன்னேற்றம் பற்றி சிந்திக்காமல் செல்லுகையில் எப்படி உருப்படும், உருப்பெறும்!   


Post Comment

டிசம்பர் 13, 2012

யாருக்கு தெரியும்...



யாருக்கு தெரியும்,
உன் அழகை போற்றவே 
எனக்கு இந்த ஜென்மம் 
பணிக்கப்பட்டிருக்கலாம்!


உன் இதழ்களால்
ஈரமாகவே, 
என்னுதடு 
வறண்டு போகிறது. 


Post Comment

டிசம்பர் 11, 2012

இந்த வருடத்தில் சறுக்கிய சினிமாக்கள் ...



தமிழனின் ஆகச்சிறந்த பொழுதுபோக்குகளில் முதலிடம் இந்த சினிமாவுக்கு தான் என்பதை எப்போதும் மறுக்க முடியாது, அந்த அளவுக்கு சினிமா மோகம் தலைத்தூக்கி நிற்கிறது. எந்த காலத்திலும் சினிமா மீதுள்ள மோகம்  கூடுகிறதே தவிர, குறைந்த பாடில்லை. காலத்திற்கு தகுந்த மாதிரி நுட்பங்கள் மாறி திரைப்படங்களின் வளர்ச்சி பிரமிப்பாக இருக்கிறது. அரங்கங்களும் உருமாறி வேறொரு பரிமாணத்தில் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. 

மாநகரங்களில் அரங்கங்கள் அதி நவீன வசதியுடன் துல்லிய ஒலி, ஒளி அமைப்புடன் நம்மை கொள்ளை கொள்கிறது... கூடவே பணத்தையும். நடுத்தர வர்க்கம் குடும்பத்துடன் இந்த மாதிரி அரங்கங்களில் சென்று பார்ப்பது சிரமம் தான்! தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிப்போன இந்த திரைப்படங்களின் இப்போதைய நிலையை கண்டு மனம் சற்று வருந்தத்தான் செய்கிறது. 

எதார்த்த சினிமா, நகைச்சுவை சினிமா, கமர்ஷியல் சினிமா என்ற பல்முக  வடிவில் நம்மை தாக்கினாலும் ஏதோ சில ஒன்றிரண்டு தான் நம்முள் இறங்குகின்றன! மற்றவை கவிதை எழுத முயற்சித்து கசக்கப்பட்ட தாள்கள் போலாகின்றன, அந்த வகையில் இந்த வருடத்தில் வெளியான பெரும்பான்மையான தமிழ் படங்கள் சோபிக்கவில்லை. பெருத்த எதிர்பார்ப்புடன் , பெரிய நடிகர் , பெரிய இயக்குனர் என்று பந்தாவாக வெளியாகிய பல படங்கள் பல் இளித்தன. 


குறிப்பாக அரவான்,வேட்டை, சகுனி, முகமூடி, தாண்டவம், மாற்றான் இப்படி பட்ட படங்கள் வெளிவந்து பெருத்த அடிவாங்கினாலும் வழக்கு எண் 18/9, மெரீனா, நான், நான் ஈ, அட்டகத்தி ,சாட்டை, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நீர்ப்பறவை இப்படி சில படங்கள் அமைதியாக வந்தாலும் கொஞ்சம் ஆறுதல் அளித்தன. 

எந்த வம்பு தும்புக்கும் போகாம மேதை, வாலிபன் சுற்றும் உலகம், பாளையங்கோட்டை, லொள்ளு தாதா இப்படி ஏகப்பட்ட படங்கள் வந்து சல்லைய கொடுக்காமலும் இல்லை. தொலைக்காட்சிக்கென்றே படமெடுக்கும் இயக்குனர்களும் தங்களது பணியை கச்சிதமாக செய்தனர்.

இன்னும் சில படங்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றன, பாப்போம் வந்து எந்த அளவுக்கு ஓடுகிறது என்று. எப்படியும் எதிர்பார்ப்பு குறைய போவதுமில்லை அவர்களும் வெளியிடாமல் இருக்கபோவதுமில்லை. 

இந்த வருடத்தில் சறுக்கி காயம் பட்ட பெரிய நடிகர்களும், இயக்குனர்களும் தவறை திருத்திக்கொண்டு புதியதாய் சிந்தித்து வரும் வருடத்தில் வெற்றி பெற வாழ்த்துவோமாக....

Post Comment

டிசம்பர் 10, 2012

செம்மண் தேவதை # 8 (Semman Devathai)


நீ குளிப்பதற்காக 
குளக்கரை வருகிறாய்,
உன்னிடம் தொலைவதற்காக 
வருகிறேன் நான்!




கூட்டத்தில் சிக்கிய  
குழந்தை 
அம்மா வேண்டும் என்று 
அடம்பிடிப்பது போல், 
உன்னை வேண்டியே  
மனம் தவிக்கிறதடி... 

Post Comment

டிசம்பர் 06, 2012

ஊர்ப்பேச்சு # 7 ( Oor Pechu)

வணக்கம் கனகசபை பார்த்து ரொம்ப நாளாச்சு ... என்ன வேலை அதிகமோ என்று கேட்டபடி தலையிலிருந்த முண்டாசை அவிழ்த்தார் ரத்தினம்!

என்ன ரத்தினம் மொட்டை எல்லாம் அடிச்சிருக்கே, ஏதேனும் விசேசமா?
ஆமாய்யா, குல சாமி கோயிலுக்கு குடும்பத்தோட போயிருந்தோம், சரி பழைய வேண்டுதல் ஒன்னு அதான்.

நீ சொன்னதும் தான் எனக்கே நினைவுக்கு வருது ரத்தினம், நானும் போயிட்டு வரணும், தூரத்துல இருக்குற கோயிலுக்கெல்லாம் தேடி தேடி போயிட்டு வரோம், பக்கத்துல இருக்கு குல சாமி, அங்க போயிட்டு வர முடியலையே. அடுத்த வாரத்துல ஒரு நா போயிட்டு வந்துற வேண்டியதுதான்.

போயிட்டு வா கனகசப, நல்லது தானே! நேத்து என்ன தழைஎல்லாம் வண்டியில ஏத்திகிட்டு போனமாதிரி தெரிஞ்சுது, எதுக்கு ?

ஆமா ரத்தினம், நாற்று வுட போறேன், அதுக்குத்தான் ஏரிக்கரை ஓரமா இருந்த ஆனா தழை, பூவரசு எல்லாம் வெட்டி வைச்சிருக்கேன், சேத்துல இத போட்டு மிதிச்சி நெல்ல தூவி விட்டு வந்தம்னா பயிரு  சும்மா கரு கருன்னு வரும் பாரு, அதை பாக்கவே நூறு கண்ணு வேணுமையா... 



முருகேசன் நேத்து உரம் வாங்கிட்டு போனான், அவனும் நாத்து வுடத்தான்  என்று சொன்னான். நீயும் உரமே போடலாமே, எதுக்கு கெடந்து வீணா இப்படி உடம்ப வருத்திக்கணும்!

இல்லை ரத்தினம் உடம்பு வளையாம, மண்ணை கொலை பண்ணுறவன் தான் இப்படி செய்வான்! குறைச்ச நாளுல அதிக மகசூல் பாக்கணுங்கிற பேராசையுல  சோறு போடுற பூமிய இப்படி உரத்தை கொட்டி, அப்புறம் பூச்சி மருந்து அடிச்சி மண்ணை நாசப்படுத்தி வைச்சிட்டானுவோ, சொன்னா திரும்பி நம்மள கேன பய கணக்கா முறைச்சிட்டு போறானுவோ, இவனுங்கள எப்படித்தான் திருத்துறதோ?

நீ சொல்றது சரி தான் கனகசபை, ரெண்டு ஏக்கர் மூணு ஏக்கர் வைச்சிருக்கிறவங்க உன்ன மாதிரி பண்ணலாம், முப்பது, நாப்பது ஏக்கர் வைச்சிருக்கிறவங்க என்னத்த பண்ணுவாங்க, அவங்க செலவ மிச்ச படுத்தனும், மகசூல் அதிகம் வரணும் என்று தானே ஆசை படுவாங்க.

நீ என்னய்யா ஒன்னும் தெரியாத மாதிரி பேசுற, உம் பாட்டனும் , எம் பாட்டனும் அம்பது , அறுவது ஏக்கர் வைச்சிருக்கும் போதெல்லாம் எந்த உரத்தை போட்டு மூட்டை மூட்டையா மகசூல் பார்த்தாங்க. இப்பதானே மண்ணையும் கெடுத்து தன்னையும் கெடுத்து மக்கள் புத்தி கேட்டு திரியுதுங்க! யாரை குத்தம் சொல்லி என்ன பயன், எல்லாம் நடக்கிறது தான் நடக்கும்! சரி ஊற வைச்ச நெல்லை வடி கட்டணும் நான் போயிட்டு வரேன்!

சரிய்யா போயிட்டு வா , அப்புறம் சாவகாசமா பேசுவோம்!

Post Comment

டிசம்பர் 04, 2012

மென் முத்தம் ...




பெருத்த சத்தத்துடன் 
ஓடியாடிய
பெரும்புயல் 
நிதானமாய் மூச்சு வாங்கும் 
மெல்லிய தென்றலாய், 
மெல்ல என் கன்னத்தில் 
இதழ் பதிக்கிறான் 
பெரும் சண்டைக்குப் பின் ...



Post Comment

டிசம்பர் 03, 2012

கொலையாக சம்மதம்...




திருவிழாக் கடைவீதியில் 
நீ நடந்து போகிறாய்,
தெரு "விழாக்கோலம்"
காண்கிறதடி!

வேண்டாமென்று 
நீ ஒதுக்கிய ஐஸ்,
உனை வேண்டியே 
கரைகிறதாம்! 


கொலையாக சம்மதமாம் 
என் வீட்டு மல்லிகைகளுக்கு, 
நீ சூடிக்கொள்வதென்றால்!


Post Comment