புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 02, 2014

பைத்தியப் பேச்சுக்கள் # 2

பத்தை முடித்து பதினொன்று பள்ளியில் சேர்ந்த சமயம், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய களைப்பை பதினொன்றில் போக்கி கொண்டிருந்த சமயம். புது வரவு ஒன்றிரண்டை தவிர்த்து மீதி அனைவரும் ஆறிலிருந்து கூட படித்து வரும் நட்புத் தொல்லைகள் தான்! தைரியம் கொஞ்சம் கொஞ்சமாய் எட்டிப் பார்க்கும் பதின்ம வயது காலம். ஒனபதிலிருந்தே பேண்ட்டுக்கு மாறியிருந்தாலும் பதினொன்று சேர்கையில் கூடவே கொஞ்சம் உடையின் மேல் கவனமும் சேர்ந்து கொண்டது. வழிய வழிய எண்ணெய் தடவி படிய சீவிய பாகவதராய் பள்ளி சென்ற காலம் போய், அயர்ன் பண்ணியும் சின்ன சின்ன சுருக்கங்களுக்கெல்லாம் மனம் பட படக்க துவங்கிய அழகிய காலங்கள் அவை. 

ஒவ்வொரு இடைவேளைக்கும் பக்கத்திலிருக்கும் பாரதி அண்ணன் சலூனுக்கு கால் ஓட்டமெடுக்க துவங்கியது. இரண்டு மணி நேரம் வகுப்பறையில் அமர்ந்திருக்கையில் தலை கலைந்துவிடவா போகிறது இருந்தும் கலையாத தலையை கலைத்து சீவினால் தான் மனம் அமைதி கொள்ளும். ஆரமபத்தில் பாரதி அண்ணன் ஒருமாதிரியாக முறைத்தவர்,  போகப் போக, என்னடா தம்பி காலையில வரலை போல என்று கேட்குமளவிற்கு பழகிவிட்டோம்!

செருப்பிலிருந்து, ஓட்டும் சைக்கிள் வரை மாற்றங்களை விரும்பியது மனசு. தன்னை அழகுப் படுத்திக் கொள்வதில் அவ்வளவு பேரார்வம். யார் சொன்னது? பெண்கள் அழகுசாதன விரும்பிகள் என்று? ஆண்களும் தான். என்ன பெண்களுக்கு அழகுப் படுத்திக்கொள்ள பொருட்கள் அதிகம் அதனால் அப்பட்டமாய் தெரிகிறார்கள். ஆண்களுக்கு பாக்கெட் சீப்பும், கர்ச்சிப்பில் ம(டி)றைத்து வைத்திருக்கும் பவுடர் போதும். 

இத்தனை வருடங்களாக "லெனின்" விற்கும் சமோசவையோ, குச்சி ஐஸையோ வாங்கி வாய் பிதுங்க பிதுங்க தின்றுவிட்டு கால் சட்டையில் துடைத்துவிட்டு தேமே என்று போனவன், பேப்பரில் மடித்து சமோசா உண்ணுமளவிற்கு உருமாறியிருக்கும் என்னைக் கண்டு நானே நிறைய முறை வியந்திருக்கிறேன். பத்துகளில் இருந்த ஆசிரியர்களைப் போல் சிடு சிடுவென இல்லாமல் சிரித்துப் பேசும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். படிப்பின் மேல் இருந்த மாயத்திரை கொஞ்சம் விலகியதாய் எண்ணிக் கொண்டேன். படிப்புக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பை மதிய உணவுக்குப் பிந்திய இயற்பியல் வகுப்பில் பாதி உறக்கத்திலும் அறிந்து கொள்ளும் பாக்கியம் கிட்டியது.

நட்புகளின் அராத்துகளும், மனம் நெருங்கிய தோழியின் சாடைப் பார்வைகளுக்காகவும் விடுப்புகளை தவிர்க்க தொடங்கினேன். எதை எதனுள் கலப்பது என்று தெரியாமல் குழம்பி, பக்கத்துக்கு மேடையில் நின்ற கோமதியிடம் கெஞ்சி கேட்க, அவளோ வேண்டா வெறுப்பாய் சொல்ல, குருட்டடியாய் கலந்து எல்லோருக்கும் மத்தியில் நான் கலந்த அமிலக் கரைசல் தனி நிறத்தில் இருக்க, வேதியியல் ஆசிரியர் செவிட்டில் அறையாத குறையாய் திட்டித் தீர்த்த கதையெல்லாம் இன்னும் அதன் நிறம் மாறாமல் உள்ளுக்குள் உறைந்து கிடக்கிறது.  

வகுப்புக்கு நான்கு பேர் அம்மாஞ்சியாக இருப்பார்கள். யாரிடமும் நெருங்கி வரமாட்டார்கள், பெண்களை விட கூச்ச சுபாவம் உள்ளவர்களாக காட்டிக் கொள்வார்கள். மதிப்பெண்ணுக்காகவே வளர்க்கப்படும் ஆடுகள். அப்படி எங்கள் வகுப்பிலும் இரண்டு பேர் இருந்தனர். இருவரும் எங்களை முரடர்களாகவும், அவர்களை நாங்கள் வெளிதேசத்து ஜந்துக்களாகவும் பார்த்துக் கொள்வோம். படிப்பெல்லாம் முடிந்து தொடர்பற்று போய் சில ஆண்டுகள் கழிந்து அதில் ஒருவனை சந்திக்கையில் அரவை மில்லில் வேலை பார்ப்பதாக சொன்னான். பள்ளியில் நன்றாக படித்தவன் கல்லூரியில் உருமாறி திசைமாறியிருக்கிறான். இன்னொருத்தனை சமீபத்தில் பேஸ்புக்கில் கண்டு பிடித்தேன். வெளிநாட்டில் வேலை பார்ப்பதாக சொன்னவன் மொபைல் நம்பர் வாங்கி அழைத்தான். பேசத்துவங்கிய இரண்டு நிமிடங்களில் அம்மாஞ்சி பிம்பம் உடைந்து அரக்கனாக பேசினான், அம்புட்டு அராத்து. நல்லவேளை என்னைப் பற்றி அவன் கேட்கவில்லை, நானும் சொல்லவில்லை.....

         
    

Post Comment

6 கருத்துரைகள்..:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

மலரும் நினைவுகள் அருமை

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மலரும் நினைவுகள்......

தொடர்கிறேன்.

Seeni சொன்னது…

பல நினைவுகளை தந்தது ...

நன்றி சகோ..

r.v.saravanan சொன்னது…

மலரும் நட்புக்கள். எனக்கு கூட என் பள்ளி கல்லுரி நண்பர்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு

”தளிர் சுரேஷ்” சொன்னது…

ஸ்கூல் டேஸுக்கு அழைத்து சென்றது பதிவு! அருமை! வாழ்த்துக்கள்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அந்த பருவ வயதில் ஏற்படும் மாற்றங்களை எத்தனை அருமையாக வடித்துள்ளீர்கள் அழகிய தமிழில் எழுத்துக்களாய்! அருமை! அரசனே! இதற்கு "பைத்தியப் பேச்சுக்கள்" என்ற தலைப்பு??!!!!!! பைத்தியப் பேச்சுக்களா இவை??!!!!

அருமையான பதிவு நண்பரே!