எப்படித் துவங்குவது என்று தெரியவில்லை, ஊதா கலந்த வெள்ளைச் சுடிதாரில் உன்னை முதன் முதலில் பார்த்த தருணத்தில் எப்படி பரபரத்து, பேச்சற்று நின்றேனோ, அதே உணர்வு தான் இப்போதும். என்ன, அப்போது மனசெல்லாம் சந்தோசங்களும், கனவுகளுமாய் நிறைந்திருந்தன, இப்போது நீயும், உன் நினைவுகளுமாய் நிறைந்திருக்கின்றது. பெரும்பாலான பொழுதுகளை உன்னோடு கழிக்கவே பிரயத்தனப் பட்டேன், இப்பொழுது எப்படி நகர்கிறது என்று எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. சத்தியமாய் சொல்கிறேன் உன்னை அடியோடு மறந்து விடவேண்டும், உன் நினைவுகளை அமிலம் போன்றதொரு ஏதாவது ஒன்றில் கரைத்துவிட வேண்டும் என்று நினைக்கையில் தான், ஊற்று நீராய் கசிந்து கொண்டிருக்கிறாய். அதன் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் தேவையாய் இருக்கிறது.
ஏதாவது ஒரு அஞ்சலுக்காவது பதில் அனுப்புவாய் என்ற நம்பிக்கையில் இத்தனை மின் அஞ்சல்களையும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன், பதிலெழுதாவிட்டாலும் பரவாயில்லை, படித்த பின் அழித்தலாவது மனது சற்று ஆறுதல் கொள்ளும். அதுவும் வாய்ப்பிருக்காது என்றுதான் நினைக்கிறேன், ஏனெனில் உன் பிடிவாதம் பற்றி நானறிவேன். கொஞ்சலிலும், கெஞ்சலிலும் சொல்லியே மாற்றிக்கொள்ளாத நீ, இப்பொழுதா மாற்றிக்கொள்ள போகிறாய்?, உன்னிடம் பிடித்ததே, நீ, நீயாக இருந்தது தான்! "எனக்காக, உன் தனித்துவத்தை அழித்துக்கொள்ளாதே, ஒருவேளை நாம் பிரிய நேரிட்டால், உன்னை எதிலிருந்து மீட்டெடுப்பாய்" என்ற உன் வார்த்தைகளின் வலிமையை நாம் பிரிந்த சில மாதங்களில் அனுபவப் பூர்வமாய் அறிந்து கொண்டேன். சில நேரங்களில் அடக்க முடியா ஆத்திரங்கள் வந்தாலும், எப்படியெல்லாம் வாழக் கூடாது என்பதை அறிவுறுத்திய உன் தெளிநிலை சிந்தனையைக் கண்டு பிரமித்துக் கொள்வேன்!
அவ்வளவு எளிதில் உணர்ச்சி வயப்படாமல் பேசுவதைக் கண்டு சில நேரங்களில் சந்தேகம் வரும், அப்போது "என்னை, காதலிக்கிறாயா? இல்லையா? என்று நான் கேட்கையில், யாருமில்லையென்றால் நெஞ்சோடு சேர்த்தணைத்து முத்தமொன்று தருவாய், அதில் கொஞ்சம் கோபம் கலந்திருந்தாலும், அடிக்கடி அப்படி கேட்க தூண்டும் எனக்கு. ஒவ்வொன்றையும் நினைவில் வைத்திருந்து, பரிசு கொடுக்கையில் முகம் சுளித்துக்கொண்டே, "ப்ளீஸ் சீனு, ச்சைல்டிஷ் ஆ பிஹேவ் பண்ணாத, கடைசி வரைக்கும் இப்படி ஒவ்வொன்றுக்கும் கணக்கு வைத்திருந்து ஞாபகமா உன்னால பரிசு கொடுக்க முடியுமா? யதார்த்தமா வாழப் பழகு! என்று சொன்ன உன் வார்த்தைகள், போன மாசம் என்னோட மனைவியின் பிறந்த நாளை மறந்து விட்டு முழித்தபோது மண்டையில் உரைத்தது. இப்படி ஒவ்வொன்றிலும் தனித்துவமாகத்தான் இருக்கிறாய் என்னுள்!
உண்மையை சொல்ல வேண்டுமெனில் உன்னோடு பழகும் காலங்களில் நான், நானாக இருந்ததில்லை. பலமுறை எடுத்துரைத்தும் உன்னை சுற்றும் "அதுவாகத்தான்" இருந்தேன்! உன்னை பிரிய நேரிட்ட அன்று உலகமே எனக்கு எதிராக இயங்குவதாய் நினைத்து ஒளிந்து கொள்ள இடம் தேடிய போது கிடைத்தது உன் நினைவு மடிகள் தான். பேருந்தோ, ரயிலோ, மரத்தடியோ, கழிப்பறையோ இப்படி எங்கிருந்தாலும் நான் தலை வைத்து சுகங் காணுவது என்னவோ உன் நினைவு மடியில்தான்! பொதுவாக பெண்களை புதிர்களின் அணிவகுப்பென்று சொல்பவர்களை நரகத்தீயில் ஆழ்த்த வேண்டும் என்றெல்லாம் நினைத்ததுண்டு. ஆனால் உன்னை நெருங்கி கவனிக்கையில் தான் அப்படி சொன்னவர்களை ஆரத்தழுவி மரியாதை செய்யாமல் போன அறிவீனத்தை எண்ணி அவமானம் கொள்கிறேன்.
ஆம், என்னை விட ஐந்து வயது இளையவள் நீ, உன்னிடம் பழகத்தூண்டிய முக்கிய காரணிகளில் ஒன்று, உன்னோட நிதானமான பேச்சு. லொட லொடவென்று பேசிக் கொல்லும் பலருக்கு மத்தியில், அளவாய், அதே நேரத்தில் மிக அழுத்தமாய் சொல்லிச் செல்லும் பாங்கிடம் தான் முதலில் மண்டியிட்டேன். சின்ன சின்ன அன்பு குமிழிக்குள் என்னை புதைத்துக் கொண்டு வெளிவர தெரியாமல் வழி தேடி அலைந்து கொண்டிருக்கையில், உன்னைச் சுற்றி அன்பு சுழலிருந்தாலும் எதனுள்ளும் தன்னை இழந்துவிடாமல், உன்னுள் இயங்க அனுமதிக்காமல், நட்பாக இருந்தாலும், பகையாக இருந்தாலும் உன்னைச் சுற்றி மட்டுமே இயங்க அனுமதிக்கும் அந்த முதிர்நிலை பக்குவத்தை கண்டு பலமுறை வாய் பிளந்து ரசித்திருக்கிறேன். அதிசயத்தின் அதிசயமென்றால் அதில் உன் பெயரைத் தான் எழுத ப்ரியப்படுவேன்.
ஆம், என்னை விட ஐந்து வயது இளையவள் நீ, உன்னிடம் பழகத்தூண்டிய முக்கிய காரணிகளில் ஒன்று, உன்னோட நிதானமான பேச்சு. லொட லொடவென்று பேசிக் கொல்லும் பலருக்கு மத்தியில், அளவாய், அதே நேரத்தில் மிக அழுத்தமாய் சொல்லிச் செல்லும் பாங்கிடம் தான் முதலில் மண்டியிட்டேன். சின்ன சின்ன அன்பு குமிழிக்குள் என்னை புதைத்துக் கொண்டு வெளிவர தெரியாமல் வழி தேடி அலைந்து கொண்டிருக்கையில், உன்னைச் சுற்றி அன்பு சுழலிருந்தாலும் எதனுள்ளும் தன்னை இழந்துவிடாமல், உன்னுள் இயங்க அனுமதிக்காமல், நட்பாக இருந்தாலும், பகையாக இருந்தாலும் உன்னைச் சுற்றி மட்டுமே இயங்க அனுமதிக்கும் அந்த முதிர்நிலை பக்குவத்தை கண்டு பலமுறை வாய் பிளந்து ரசித்திருக்கிறேன். அதிசயத்தின் அதிசயமென்றால் அதில் உன் பெயரைத் தான் எழுத ப்ரியப்படுவேன்.
"இப்பொழுது தான் இப்படி புலம்பி தவிப்பாய், கால சுழற்சியில் உனக்கே உனக்கென்று ஒரு பெண் வருவாள், இதை விடவும் வாழ்க்கை மிக வேகமாக சுழன்றோடும், அப்போது என் நினைவு கூட உனக்கு வராமல் போகலாம், எல்லாவற்றுக்கும் தயாரான மன நிலையில் வாழப் பழகு, ஏமாற்றங்கள் இன்றி வாழலாம்" இதுதான் இறுதியாக நாம் சந்தித்த தினத்தில் நீ சொன்ன வார்த்தைகள். நீ, சொன்னது போன்று எனக்கே எனக்கென்று ஒருத்தி வந்திருக்கிறாள், உன்னைப் போன்று இல்லையென்றாலும் அவளிடமும் பிரமிக்க ஏராளம் வைத்திருக்கிறாள். நுட்பமான அன்புக்காரி. எனக்கென்று நெய்த ஆடையவள். திகட்டாமல் அன்பூட்டும் அழகி. அவளைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது, இருந்தும் சொல்வதினால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதினால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். உன்னை, உன் நினைவுகளை மறந்து விடுவேன் என்று சொன்ன வார்த்தைகள் மட்டும் இன்றும் என் செவி மண்டல சுவர்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. பிராண வாயு இன்றி உயிர் வாழ முடியுமென்றால் நான் உன்னை, உன் நினைவுகளை மறப்பதும் சாத்தியமே!
படிக்க மாட்டாய் என்று நம்புகிறேன், அப்படி ஒருவேளை நீ படிக்க நேரிட்டால் தயவு செய்து பதில் அஞ்சல் மட்டும் அனுப்பிவிடாதே!
Tweet |
6 கருத்துரைகள்..:
படிக்க மாட்டாய் என்று நம்புகிறேன், அப்படி ஒருவேளை நீ படிக்க நேரிட்டால் தயவு செய்து பதில் அஞ்சல் மட்டும் அனுப்பிவிடாதே!
இது இது தான்,,,,
பதில் அனுப்பமாட்டாள் என தெரிந்தும் அனுப்பாதே,,,,,
அருமையான கடிதம், வாழ்த்துக்கள்.
ரொம்ப நல்ல கடிதம் அரசன்! இப்படி ஒரு உருக்கம் ஏதோ உண்மையைச் சுமப்பது போல இருக்கே....
உருக்கி விட்டது..
பதில் வேண்டாமென பாவைக்கு எழுதியது....
உருக்கம்,,....
உருக்கமாய் ஒரு கடிதம்...
அட !!! அழகான எழுத்து.செம யா எழுதிருக்கீங்க அண்ணா , உங்கள் காதலிக்கு எழுதினதோனு நெனச்சுப் படிச்சிட்டே வந்தா... கேரக்டர் திடீர்னு சீனுவாகிருச்சு, அப்புறம். மனைவிலாம் , ..:) அப்புறமா தான் இது கற்பனைனு புரிஞ்சேன்,
கருத்துரையிடுக