புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 06, 2015

இரவு நேரப் பேருந்து பயணங்கள் ....


பேருந்துப் பயணங்களை எந்த அளவிற்கு அலாதியாக எண்ணி ,பயணம் செய்தேனோ அதே அளவிற்கு வெறுக்கவும் செய்யத் தூண்டுகின்றன சமீபத்திய பேருந்து பயணங்கள். சென்னையின் மாநகரப் பேருந்துகளின் பயண அனுபவங்களை சொல்ல சொல்ல சளைக்காது, அவ்வளவு சுவாரசியமாய் இருக்கும். சில நேரங்களில் மண்டையை கொதிக்க வைக்கவும் செய்யும். எதுவாக இருந்தாலும் குறுகிய நேர பயணமென்பதால் பெரும்பாலும் மனதில் நிலை கொள்ளாமல் எளிதில் மறைந்து விடுகின்றன, ஆனால் தொலை தூர பயணங்கள் தரும் சுகானுபவங்களை அவ்வளவு எளிதில் மறந்து விட இயலாது. ஐந்து வருடங்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்வு கூட இன்னும் மனதின் ஓரத்தில் வடுவாய் இருக்கின்றது. அப்படியொரு வல்லமை இந்த நெடியப் பயணங்களுக்கு மட்டுமே சாத்தியம்.

சனி இரவு சென்னையிலிருந்து கிளம்பி ஊருக்கு சென்று, மீண்டும் ஞாயிறு இரவு ஊரிலிருந்து கிளம்பி சென்னை சேர்வது இதுதான் பயணம். சோ, அடுத்தடுத்த இரண்டு இரவுகளை பேருந்தோடு கழிக்க வேண்டிய கட்டாயம். இப்போதெல்லாம் தனிப்  பயணமென்றால் பக்கத்தில் அமர்பவர்களை எண்ணித்தான் கலங்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஆசாமியும் ஒவ்வொரு ரகத்தில் வருவார்கள் நாம் தான் சிக்கி சிதை பட நேரிடுகிறது. அதற்கு தகுந்தாற்போல் தான் இருக்கைகளும் கிடைக்கின்றன. எல்லாம் சரியாக அமைந்து, மகிழ்ச்சியான பயணமாக இருக்கப் போகிறது என்று எண்ணி முடிப்பதற்குள் எதாவது ஒரு சக்கரம்  தன் மூச்சை நிறுத்தி நமது எல்லா சந்தோசத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்து விடுகின்றன! ஆகையால் எவ்வித எதிர்பார்ப்புமின்றி தான் பயணத்தை துவக்குவதினால் பெருத்த ஏமாற்றங்கள் கிடைப்பதுமில்லை!

சனி இரவு அருகில் அமைதியான ஜென்டில்மேன் அமர எவ்வித இன்னலுக்கும் ஆளாகாமல் சுகானுபவமாக இருந்தது, திரும்பி ஞாயிறு இரவு விதியின் சதிப் பிடியில் வசமாக சிக்கி கொண்டேன். எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் அமர்ந்திருக்க கடைசி இருக்கைதான் ஆக்கிரமிக்கப் படாமலிருக்க, வலப்பக்க சன்னலோர இருக்கையை நான் ஆக்கிரமித்தேன். அப்பவே முன்னிருந்து பின்னோக்கிய ஒரு யுவதியின் புன்னகையில் ஒரு ஏளனம் இருந்தது, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சன்னல் வழியே அடுத்த பேருந்தினுள் என் கவனத்தை செலுத்தினேன். பதினைந்து நிமிடங்கள் தாமதாக கிளம்பி மெல்ல ஊர்ந்து அரியலூரை கடந்து ஜெயங்கொண்டம் சாலையில் ஏறியதும் ஓட்டுனருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை, மனுஷன் பாடாவதியாக ஓட்ட ஆரம்பித்து விட்டார். இரண்டு லாரிகளின் பின் பக்கங்களை முத்தமிட வேண்டியது நூலிழையில் தவிர்த்தாலும் வேகத்தை மட்டும் குறைக்கவில்லை. மனதினுள் சின்ன ஜெர்க் ஆனாலும், இன்னைக்கு சீக்கிரம் போய் சேர்ந்துவிடலாம் என்று நம்பினேன்.(அட சென்னைக்கு தாங்க). அதுவரை கடைசி இருக்கையில் ஒருத்தரும் ஆக்கிரமிக்கவும் இல்லை. 

ஜெயங்கொண்டம் வந்ததும் ஆறேழு இந்தி வாலாக்கள் ஏற, பேருந்தே அதிர ஆரம்பித்து விட்டது. சொல்லி வைத்தாற் போல் என்னருகில் அமர்ந்து கொண்டான் அந்தக் கூட்டத்தின் பாஸ். என்ன பேசுகிறார்கள் என்று விளங்கவில்லை, இன்னொன்று அவர்களின் செய்கைகள் மண்டையை கொதிநிலையிலையே வைத்திருந்தது. அதுவரை குதிரை மாதிரி சீறிய டிரைவரும், வண்டியை கழுதை மாதிரி நகர்த்த ஆரம்பித்து விட்டார். ஒருவழியாக வண்டி விக்கிரவாண்டியில் ஓய்வுக்காக நிறுத்த, சட சடவென்று ஓடி இரண்டு பேர் கைகள் நிறைய முறுக்கு, மிக்சர், லேஸ் இப்படியான நொறுக்குத் தீனிகளை வாங்கி வந்து கொறிக்க ஆரம்பிக்க, ச்சே என்ன இவர்கள் என்று எண்ணினாலும் பிறகு , அவர்கள் காசு, அவர்கள் வயிறு நமக்கென்ன என்று சமாதானப்படுத்திக் கொண்டேன். அப்பொழுதான் என்னருகில் அமர்ந்திருந்த அந்த பாஸ் பேக்கினுள்ளிருந்து ஒரு பெப்சி பாட்டிலை எடுத்தான். கொஞ்சம் கடி, கொஞ்சம் குடியொடு பெப்சி பாட்டிலை காலி பண்ணி தூக்கி எறிந்துவிட்டு, பேருந்து கிளம்பிய சற்று நேரத்தில் வண்டிக்குள் வண்டி ஓட்ட ஆரம்பித்து விட்டான். அப்போதுத்தான் வாடையும் மெல்ல வர ஆரம்பித்தது, ஆம் பெப்சிக்குள் மது கலப்படம். 

ஏற்கனவே உறக்கமின்றி உழன்று கொண்டிருக்க, கூட அந்தப் பக்கி குடைச்சலைக் கொடுக்க, மூன்றரைக்கு வடபழனியை வந்து சேர வேண்டிய பேருந்து ஐந்து மணிக்கு வந்தடைந்தது நெஞ்சில் இன்ப சுரக்க ஆரம்பித்தது. இப்படி எத்தனை சலிப்புகள் வந்தாலும் பேருந்துப் பயணங்களின் மீதுள்ள காதல் குறையவே மாட்டேன் என்கிறது. வேறு வழியில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்!   
     

Post Comment

6 கருத்துரைகள்..:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கடைசி இருக்கை என்றும் சிரமம் தான்...

பெயரில்லா சொன்னது…

வேறு வழியில்லை. ஆம்!

seshan

r.v.saravanan சொன்னது…

பயணங்களில் சோர்வும் நாம் சந்திக்கும் மனிதர்கள் நடந்து கொள்ளும் விதங்களால் சலிப்பும் தோன்றினாலும் பயணங்கள் எனக்கும் சலிப்பு ஏற்பட்டதில்லை அரசன்

'பரிவை' சே.குமார் சொன்னது…

பெரும்பாலும் பின் வாசல்படிக்கு அருகே கடைசி இருக்கையில் அமர்ந்து பயணிப்பதே எனக்கும் பிடிக்கும்... இது போன்ற சுகானுபவங்கள் நிறைய் இருக்கு நண்பரே...

நல்ல பகிர்வு....

Kasthuri Rengan சொன்னது…

பெப்சியில் மதுக் கலப்படம் ...
வித்தைக் காரங்க
என்ஜாய் மாமு

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆஹா ஜன்னல் இருக்கை...மிகவும் பிடிக்கும்...

பெப்சியில் மதுவா....அடப்பாவிங்களா...இப்படியுமா....