ஐப்பசியில் சன்னமாய் தொடங்கி மார்கழியில் மல்லுகட்டும் பனியின் குளுமை, விடிகாலையில் பார்த்தால் சிறுமழை பெய்து நனைத்த மாதிரி செடி கொடிக குளித்திருக்கும். எவ்வளவு சீக்கிரம் படுத்தாலும் காலையில் எழும்ப எவருக்கும் மனசு வராது. காலைச்சூரியனின் இளஞ்சூட்டு வெயிலில் முகம் கழுவவே எல்லோரும் பிரியப்படும் கடுங்குளிர் காலம் அது. ஆனால் முதல் ஆளா எழும்பி குளுமையை விரட்டிக்கொண்டிருந்தார் இரத்தினம்! கடினமான உழைப்பாளி என்று சொல்லுவதற்கு வேறு ஏதும் வார்த்தைகளில்லை.
இப்ப போனாதான் பய ,பள்ளிக்கூடம் கிளம்பறதுக்குள்ள நாம வூடு திரும்ப முடியும் எந்திருடி. பனி நப்புல புடுங்க ஏதுவா இருக்கும் கெளம்பு , சீக்கிரம் கெளம்பு , பயலையும் எழுப்பு அவன் வந்தா ரெண்டு மெனை சீக்கிரம் காலியாவும் என்று அவசரப்படுத்திக் கொண்டிருந்தார் இரத்தினம் கம்பளித்துண்டை தேடியபடி!
மேற்கத்தி காட்ல வெளைஞ்சி வெடிக்க காத்திருக்கும் உளுந்து பிடுங்க தான் இம்புட்டு காலையிலே மனுஷன் ஆர்ப்பாட்டம் போடுறது. மூணு வருசமா அரைப்படி வெதை போட்டா முழுசா மூணு படி கூட விளையாம ஏமாத்தி கிட்டு இருந்த பூமி, இந்த வருசம் தான் காய் சடை சடையா காய்ச்சிருப்பத பார்த்து ஊர்க்கண்ணு விரிஞ்சிருச்சி, மனுசன் மனசு நெறஞ்சிருக்கு.வெயிலுக்கு முந்தி போனா களைப்பு தெரியாம சீக்கிரமா பிடுங்கலாம்னும், வெயில் ஏற ஏற உளுந்த நெத்து வெடிக்க ஆரம்பிச்சிடும்ன்னு உள்ளுக்குள்ள ஓடுறதாலத்தான் இம்புட்டு அவசரப்படுத்திட்டு இருக்கார்.
இந்த மனுசனுக்கு தூக்கமே வராது , அலுத்துக்கொண்டே பாயின் மூலையில் சுருண்டு கிடக்கும் பயலை எழுப்பினாள் இரத்தினத்தின் மனைவி. ரெண்டு மூணு தடவ சுனங்கினவன் அப்பாவின் சத்தம் கேட்டு எழுந்து கொண்டான்.
இவர்களை எழுப்பிக்கொண்டே சுக்கு காபியும் தயார் பண்ணிட்டார், ஆவி பறக்க ஆத்திக்கொண்டிருக்க, கழுவிய முகத்தோடு அவர் பக்கம் வந்து அமர்ந்தான் பையன் ... ஆத்திய டம்ளரை அவனிடம் நீட்ட , வேண்டாம் உரைக்கும் என்று தப்பித்துக்கொண்டான்.
இரத்தினம் வைப்பது சுக்கு காபியல்ல, கசாயம் ன்னு தான் சொல்லணும் அவன் மனைவி மட்டும் அறிந்த இரகசியம் அது. குளிருக்கு இது எவ்வளவோ மேல் என அவளும் ஒரு டம்ளரை காலி பண்ணிவிட்டு
மூவரும் கிளம்பினார்கள்.
மணி ஏழுக்கெல்லாம் கால் காணி உளுத்தங் கொடிகளை பிடுங்கிவிட்டார்கள், பனி நப்போடு கட்டு கட்டியாச்சின்னா இன்னைக்கே அடிச்சி உளுந்த எடுத்துடலாம் என்கிற முனைப்பில் தீவிரம் செலுத்தினார் இரத்தினம்.
மணி எட்டை நெருங்கினதும் புள்ள பள்ளிக்கூடம் கெளம்பனும், வீட்டுக்கு போகட்டுமான்னு மனைவி கேட்க, சரி நீயும் கூட போயி அவனை கெளப்பி அனுப்பிட்டு எனக்கு சோறு எடுத்துவான்னு சொல்லிட்டு புளிச்ச செடியை முறுக்கி முடிந்து கொண்டிருந்தார், உளுத்தங்கொடிகளை கட்டுவதற்கு.
உளுத்தங்கொடி சிறுசா இருந்தா பெரிய கூடையில அள்ளிடலாம், இந்த முறை உரம் கொஞ்சம் கூடுதலா போட்டதால செடி கொஞ்சம் முரடா வளர்ந்திருக்கிறதுனால கட்டா கட்டிடலாம் என்பது இரத்தினத்தின் எண்ணம்.
ஆறேழு கட்டுகளாக கட்டி கொண்டு போய் சிங்காரவேலு களத்துல சேர்த்தார், கடைசி கட்டையும் பிரிச்சி காயப் போட்டுட்டு, களைச்சி போய் புளிய மரத்தடியில் உக்காரவும், சோத்துக் கூடையோட மனைவி வரவும் சரியா இருந்தது ....
Tweet |
17 கருத்துரைகள்..:
அரசா மறுபடியும் அருமையான ஊர்ப்பேச்சு...சின்ன சின பேராவா இருந்ததுனால படிக்க எளிதா அழகா இருக்கு தொடரட்டும்...
நாமும் உளுந்துச்செடி பறிக்க உளுந்துக் காட்டுல இருக்குற மாதிரியே ஒரு ஃபீல்
நாமும் உளுந்துச்செடி பறிக்க உளுந்துக் காட்டுல இருக்குற மாதிரியே ஒரு ஃபீல்
எளிமையான, அழகான எழுத்துநடையில் பின்னிட்டிங்க போங்க. . .இதை ஒரு புத்தகமாக போட்டால் என்ன??
முதல் பத்தி ரெம்ப புடிச்சுருக்கு ...!
உரைக்குது - உறைக்குதுன்னு வருமா ? வர வர எனக்கு தமிழ்ல நெறைய சந்தேகம் ...!
ரெண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உரைக்கவும் ... PLEASE
நல்லதொரு ஆரம்பம்... தொடருங்கள்...
வாழ்த்துக்கள்...
@ஜீவன் - உரைக்குது தான் சரி..
மிகவும் சிறப்பாக தொடர்கின்றது ஊர்ப்பேச்சு மென்மேலும் சிறப்பாகத்
தொடர வாழ்த்துக்கள் சகோதரா .
nallave irunthathu...
ஊர்ப்பேச்சு அருமை. தொடருங்கள்
த.ம.7
ஊர் பேச்சு படிக்கிறப்ப கிராமத்துக்கு போன பீலிங் வந்துருச்சு அரசன்
கிராமத்துக்கு போன உணர்வு வருது
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...
உளுந்து வெளச்ச ஊர்ப்பேச்சு அருமை! வாழ்த்துக்கள்!
மண்மனம் வீசுகிற கதை,கதை தொடரா,,,,,,?தொடர் சிறக்க வாழ்த்துக்கள்.உளுந்தக்களங்கள் இன்னும் இருக்கின்றனவா என்ன?தார் ரோடே களங்கள் ஆகிப்போகின் இப்போது/
த.ம 8
கருத்துரையிடுக