புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 01, 2015

கேப்டனுக்கு ஒரு கடிதம் ....


திரு. விஜயகாந்த் அவர்களே,

வணக்கம், முதலில் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன், ஆளும் மந்திரிகள் அனைவரும் இடைத் தேர்தலில் கண்ணயராமல் பணியாற்றி, ஜெயாவின் பாதத்தில் வெற்றியை? சமர்பித்து விட்டு ஒய்யாரமாய் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில், எதிர்க்கட்சி? தலைவர் என்ற முறையில் விவசாயிகளின் மீதான உங்களின் திடீர் கரிசனத்திற்கு மனம் நிறை நன்றிகள்! 

சோசியல் மீடியாவில் உங்களை வெறும் கேலிப் பொருளாக மட்டுமே சித்தரிக்கின்றனர், அதற்கெல்லாம் கலங்கிவிடாமல் உங்களது அரசியல் பயணத்தை இன்னும் இன்னும் ஆழத்தில் செலுத்திக் கொண்டு வருவது நாடறிந்ததே! அந்த வகையில் சமீபத்திய டெல்லி பத்திரிக்கையாளர் சந்திப்பை முறியடித்து பெரும் வெற்றி கண்டிருக்கிறது உங்களின் யோகா பயிற்சி!

எல்லா அரசியல் தலைவர்களிடம் இல்லாத சிறப்பு உங்களிடம் இருக்கிறது என்னவெனில் உள்ளதை உள்ளபடி சொல்லும் கலப்படமற்ற பேச்சு! அந்த சிறப்பான பேச்சே உங்களுக்கு ஆப்பாக அமைவது கவலை தரும் ஒன்று! எவ்வளவு  ஆழமென்றாலும் அதை  பார்த்து தீருவேன் என்று உறுதியோடு செயல்படும் உங்களது தீரத்தை பல சுவரொட்டிகளில் உங்களது விசுவாசிகள் கொச்சை தமிழில் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்க. சில மாதங்களாக தங்களது தொலைக்காட்சியும் அதே வேலையை செவ்வனே செய்து கொண்டிருப்பதை என்ன செய்வது என தவித்துக் கொண்டிருக்கும் பலரில் நானும் ஒருவன்!

உங்களின் ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்பும் பெரும் வெற்றியடைந்து மக்களின் துன்பங்களை போக்கி வருகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன், பொது வெளியில் பேசுவதற்கென்று ஒரு முறை இருக்கிறது அதை உணர்ந்து உங்களை மாற்றிக் கொண்டு செயல்படாதவரை உங்களின் தொண்டர்களைத் தவிர ஒருத்தரும் உங்களை மதிக்கப் போவதில்லை என்பது சற்று கசப்பான உண்மை! அரிதிலும் அரிதாக தான் சில சந்தர்ப்பங்கள் கிட்டும் அந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டீர்கள் என்றே நினைக்கிறேன் மீண்டுமொரு சந்தர்ப்பம் கிட்டுமா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்! 

குறுவை சாகுபடிக்கான பாசன தண்ணீர் பதினைந்து நாட்களுக்கு மேலாகியும் இன்னும் விவசாயிகளை சென்று சேரவில்லை, "காவிரித்தாய்?" க்கு இடைத்தேர்தல் குடைச்சல் இருப்பதினால் இப்போதைக்கு இதன் மீதான கவனம் விழ வாய்ப்பில்லை. ஓட்டு நேரத்தில் தான் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் விவசாயிகள் போன்ற அடித்தட்டு மக்களின் நினைவுகள் வரும் ஜெயா விற்கும், கருணாநிதிக்கும்!


திருவாரூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து ஆர்ப்பாட்டமும் செய்திருக்கிறீர்கள், அடுத்த வருடம் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து தான் துளிர் விட்டிருக்கிறது உங்களின் திடிர்க் கரிசனம் என்றாலும் உங்கள் குரல் ஒலித்தது சற்று ஆறுதல் தான்.

கிடைக்கும் மேடைகளில் எல்லாம் ஜெயாவை திட்டவும், கருணாவை காய்ச்சி எடுக்கவும் பயன்படுத்தாதீர்கள், இன்னொன்று நீங்கள் எப்படி காரசாரமாக பேசினாலும் கடைசியில் காமெடியாக போய் தங்களையே அடி மட்ட அளவிற்கு வைத்து கலாய்த்து விடுகிறார்கள் நம்மவர்கள்! இதில் உங்கள் பங்கும் கணிசமாக இருக்கிறது, ஆம் எங்கையாவது ஏதாவது சிக்காதா?, பொழுது போகாதா ? என்று தேடிக்கொண்டிருக்கும் பத்திரிக்கை நண்பர்களுக்கு மத்தியில் பெரிய பந்தியே வைத்து விட்டுப் போய்விடுகிறீர்கள்  அவர்கள் வைச்சி செய்யாமல் வேறு என்ன செய்வார்களாம்?

பாருங்கள் நானே சொல்ல வந்ததை சொல்லாமல் மீதி எல்லாத்தையும் உளறிக் கொண்டிருக்கிறேன், சரி மேட்டருக்கு வருகிறேன்,

நீங்கள் வாக்கு வேண்டும் என்பதற்காக என்ன வேணும்னாலும் செய்து கொள்ளுங்கள், கடைசி நேரத்தில் எவன் அதிக காசு கொடுக்கிறானோ அவனுக்கு வாக்கை செலுத்தி விட்டு வானத்தை வேடிக்கை பார்க்கிற கூட்டம் நாங்கள் நீங்கள் என்ன காட்டு கத்து கத்தினாலும் எங்கள் மண்டையில் ஏறவே ஏறாது.



காவிரித்தாய் என்று விளித்து ஜெயாவிற்கு விழா எடுத்த சில கோமாளி விவசாய சங்கங்கள் போல் நீங்களும் கழுத்தில் பச்சை துண்டு போட்டால் மட்டும் விவசாயி ஆகிட முடியாது, அவர்களின் கஷ்டங்களை அடி மட்டத்தில் இருந்து அணுக வேண்டும்,அல்லது அறிந்து கொள்ள முனைய வேண்டும்! அதை தவிர்த்து விட்டு பச்சை துண்டை போட்டுக்கொண்டு, எனக்கு ஓட்டு போடுங்கள் உங்களை தங்க தட்டில் வைத்து தாங்குகிறேன் மக்களே என்று கூப்பாடு போட்டு துயரில் இருப்பவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தாதீர்கள்!

திருவாரூரில் ஆர்ப்பாட்டம் பண்ணிய அன்று உங்கள் தொலைக்காட்சியில், தாங்கள் விவசாயிகளின் துயர்களை கேட்டறிவது மாதிரி ஒரு காட்சி ஓடிக்கொண்டிருந்ததை காண நேரிட்டது. விவசாயிகளும், கழனியில் வேலை செய்யும் பெண்களும் களைத்துப் போயிருக்க, நீங்கள் மடிப்பு கலையாத உடையில், முகத்தில் பாதி மறைக்கும் அளவிற்கு குளிர் கண்ணாடி அணிந்து கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! சிறிது நேரம் வெயிலில் நிற்கவே கூசுகிறது உங்கள் கண்கள், பொழுதினிக்கும் கொளுத்தும் வெயிலில் நின்று உடலெரிந்து சாகும் விவசாயி நிலையை எண்ணி பார்த்திர்களா?

எதுவும் செய்யமுடியவில்லை என்று கையை அகல விரிப்பதை விட கொடுமையானது இப்படியான கோமாளித்தனங்கள்! அவர்களோடு அவர்களாக கலந்து கொள்ள முடியவில்லை எனில், மற்ற கேடு கெட்ட அரசியல்வாதிகளைப் போன்று தள்ளி நின்று வேடிக்கைப் பாருங்கள் "விவசாயிகளின் இறப்பை"!

கொதிப்புடன்

கிராமத்தான்!

Post Comment

6 கருத்துரைகள்..:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பத்தோடு 11...

இந்த ஆப்பு பத்தாது...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

இவரெல்லாம் அதுக்கு சரிபட்டு வரமாட்டார்! விட்டுத்தள்ளுங்கபாஸ்!

balaamagi சொன்னது…

வணக்கம்,
அருமையாக சொன்னீர்கள்,
மாறும் என நினைக்கிறீர்களா?
நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அரசன்! உங்கள் ஆதங்கம் புரிகின்றது....கடிதம் சிறப்பு ஆனால் விழலுக்கு இரைத்த நீர். எனவே எங்களது ஆதங்கம்...இப்படிக் கடிதம் எழுதி உங்கள் தமிழை, படைப்புகளை புரியாதவங்களுக்குப் படைத்து வீணாவதை விட உங்கள் எழுத்துகளை ரசித்து வாசிக்கும் வாசகர்கள் எங்கள் எல்லோருக்கும் படையுங்கள்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல பகிர்வு.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அவர் புரிந்து கொள்வது சந்தேகம் என்று தான் தோன்றுகிறது.....