புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

பிப்ரவரி 24, 2014

வேரோடும், வேரடி மண்ணோடும்....


திருமணம் என்பதை வெறும் நிகழ்வாக , இரு மனங்களின் இணைவாக, புதிய உறவுகளின் தொடக்கப்புள்ளியாக  கருதி இதுவரை கடந்து வந்து கொண்டிருந்த என்னை , திருமணம் என்பது சாதாரண நிகழ்வல்ல, அது பிரிவின் அழுத்தம் என்பதை சமீபத்திய, என் தங்கையின் திருமணம் மிக அழுத்தமாய் உணர்த்தி இருக்கிறது. மீண்டு வர இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ? காயத்தின் மருந்தாக காலமிருக்கும் என்று நம்புகிறேன்!   



பெண்ணாய் பிறந்து விட்டால் இன்னொரு குடும்பத்திற்கு வாழப் போய்த்தான் ஆகவேண்டும் தானென்று மூளை சொல்லும் ஆறுதலை ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது! மங்களகரமான நிகழ்வுதான், ஆனால் பூரண மகிழ்வை மாப்பிள்ளை குடும்பம் தான் அனுபவிக்க முடிகிறது, நிச்சயம் பெண் வீட்டாரால் முடியாது!

நிச்சயம் பண்ணியதிலிருந்து "ஏதோ ஒன்றை இழந்த உணர்வு" இருந்தாலும், திருமண நாள் நெருங்க நெருங்க , அழுத்திய பாரம் மிக கொடியது! இத்தனை வருடங்களாக குடும்பத்தின் ஒரு அங்கமாய் இருந்த பெண்ணை, திருமணம் என்கிற வடிவில் இன்னொரு குடும்பத்தில் இணைப்பதின் மூலம் ஏற்படும் பிரிவின் வலியை பூரணமாக உணர்ந்தேன்! 

குடும்பமாக அமர்ந்து உணவருந்திய நாட்கள் ஏராளம் என்றாலும் திருமணத்துக்கு முந்திய நான்கைந்து நாட்கள் அனைவரும் ஒன்றாக உணவருந்தியவைகள் வாழ்வின் உன்னத நாட்கள்!

மாப்பிள்ளை வீட்டார் தங்கையை அழைத்துக்கொண்டு செல்லும்போது, அம்மா, அப்பா உருகி அழுகையில், என்னை கட்டுப்படுத்த பெரும்பாடு பட்டேன், அப்படி இருந்தும் திருமணம் முடிந்த மறுநாள், தங்கையின் பிரிவை உணர்த்திய சிறிய நிகழ்வில் உடைந்து அழுதேன்! 

தங்கையுடன் போட்ட சண்டைகள், சில நெகிழ்வான தருணங்கள் அனைத்தும், அழகிய நிகழ்வுகளாக  மனதில் பதிய தொடங்கிவிட்டன. என்றோ நடந்த வேடிக்கையான நிகழ்வுகள் கூட இனிப்பான நினைவுகளாக உருமாறுவது இந்த மனித வாழ்வில் மட்டுமேதான்! எத்தனை வியப்புகள் நிறைந்த வாழ்க்கையினை இரசிக்க நேரமின்றி மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறோம் நாம்! காலமும், சூழலும் தான் மனிதனை பண்படுத்தி பக்குவப்படுத்துகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது என்னால்! 

நம் வீட்டில் சுதந்திரமாய் சுற்றித் திரிந்த பட்டாம்பூச்சியின் சிறகில் சிறிதை கிள்ளுவது போல் தான் திருமணம். என்னதான் புகுந்த வீட்டில் சுதந்திரம் கொடுத்தாலும், பிறந்த வீட்டின் சுதந்திரம் போலாகாது என்பது என் அழுத்தமான நம்பிக்கை! பிறந்த வீட்டின் வாழ்வியல் பழக்கத்திலிருந்து, புகுந்த வீட்டின் பழக்க வழக்கத்திற்கு மாறிக்கொள்ள சற்று காலம் ஆகும். மணமாகும் ஆண்களுக்கு வேறுமாதிரியான சிக்கல்கள் இருக்கின்றன. அதை வேறு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்!

இத்தனை காலமாக நம்முள் ஒருவராக, சுக துக்கங்களை பகிர்ந்து கொண்ட ஒருவரை, திடீரென இன்னொருவருக்கு சொந்தம், முன்பு போல் உரிமை எடுத்துக் கொள்ள முடியாது என்று எண்ணுகையில் சொல்ல முடியா சுமைகள் கூடினாலும், எத்தனை காலம் தான் இப்படியே வைத்திருக்க முடியும் என்ற நிதர்சனம் சமாதானம் சொல்லி சாந்தப் படுத்துகிறது. 

வேரோடும், வேரடி மண்ணோடும் இங்கிருந்து பிடுங்கி இன்னொரு குடும்பத்தில் சேர்ப்பித்து இருக்கின்றோம், செழித்து வளரும் என்ற நம்பிக்கையுடன். நம்பிக்கைதானே எல்லாமே! 
   

Post Comment

10 கருத்துரைகள்..:

சீனு சொன்னது…

நிச்சயமாக நம்பிக்கை தான் ராசா.. வேரோடும் வேரடி மண்ணோடும் எடுத்துக் கொடுப்பதால் செழித்து வளர வேண்டும்... வளரும்..

ஒரு அண்ணனாக உங்கள் பாசம் வார்த்தையில் (இலக்கியமாக) வெளிப்படுகிறது...

உங்கள் அப்பா அம்மாவிற்கு சீக்கிரம் (மறு)மகள் கிடைக்க வாழ்த்துக்கள் :-)

பிகாஸ் நாங்க உங்க ஊருக்கு வந்தப்ப தஞ்சாவூர பாக்காம வந்துட்டோம்... மறுக்கா ஒருக்கா வர வேணாமா அதான் :-)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களுக்கு வாழ்க்கைத்துணையாக வருபவர்கள் கொடுத்து வைத்தவர்கள்...

வாழ்த்துக்கள்..

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

அண்ணனாய் உங்கள் உணர்வை அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது, சில இடங்களில் கண்ணில் நீர் கூட கோர்த்தது. புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் கடினமாக இருந்தாலும அதுதான் வாழ்க்கை!!
கண்டிப்பாக உங்கள் தங்கை செழிப்பாக நலமாக மகிழ்ச்சியாக இருப்பார். வாழ்த்துக்கள்!
திரு.தனபாலன் சொல்லியதை நானும் வழிமொழிகிறேன்..உங்களுடைய இந்தப் புரிதல் பாராட்டுக்குரியது.
த.ம.4

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மிகவும் பாசமுள்ள அண்ணன் என்று உணர முடிகிறது! ஆனால் இதுவும் வாழ்க்கையில் ஒரு பகுதி! இதுவும் கடந்து போகும்! வாழ்த்துக்கள்!

JR Benedict II சொன்னது…

திண்டுக்கல் ஜி யை வழி மொழிகிறேன்..

வாசிக்கும் போதே நேக்கும் அது தான் தோன்றியது..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தங்கச்சி சீரோடும் சிறப்போடும் வாழ்வாள் கலங்கவேண்டாம், மருமகனோ மருமகளோ பிறந்துவிட்டால்அந்த பாசமெல்லாம் அவர்கள் பக்கம் கொட்டி வேறு ஒரு உலகத்துக்கு நம்மை அழைத்து செல்லும் !

என் அக்காள் கல்யாணத்தன்றும் நான் தனியாக போயி அழுததுண்டு.

ezhil சொன்னது…

அண்ணனாய் உங்கள் பாசம் அருமை... கொடுத்து வைத்த தங்கை... எனக்கும் இரண்டு அண்ணங்கள் என்பதால் சொல்கிறேன்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உங்கள் பாசத்தை மெச்சுகிறேன்....

உங்கள் தங்கைக்கும் அவரது கணவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.......

Thulasidharan V Thillaiakathu சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான ஒரு பதிவு! உங்கள் பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது! பாசக்கார அண்ணன் தான்! "அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அன்றோ" என்ற பாடல் நினைவுக்கு வருகிறது! அதோடு சிவாஜி தன் தங்கையை மணம் முடித்து அனுப்பி பாடும் அந்தக் காட்ச்சியும் நினைவுக்கு வருகின்றது நண்பரே!

வேரோடும் அதன் அடி மண்ணோடும் செல்லும் செடிகளும், மரங்களும் செழிப்பாகத்தான் இருக்கும்! தங்கள் தங்கையின் மணவாழ்க்கை நன்றாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்!

தொடர்கிறோம்!

துளசிதரன், கீதா