புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

பிப்ரவரி 20, 2015

நடன நடிகை - "கதை"


வழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது.

இரண்டு நாளைக்கு முந்திய நிதானம் தவறிய போதையில், எட்டி உதைத்தும் கடிக்காமல் விலகி ஓடியது இதே நாயகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

நானிருப்பது மக்களடர்த்தி கொண்ட குறுகிய தெரு, திரையில் சிரிக்கும் நடிகர்களுக்கு நாங்கள் தான் எல்லாம், சிகை அலங்காரத்திலிருந்து, பவுடர் பூசுவது வரை எல்லாம். இந்த எல்லாத்துக்குள் எல்லாத்தையும் அடக்கி கொள்ளுவது உங்களின் கற்பனை சாமர்த்தியம். 

பூர்வீகம் ஆந்திரா என்று அம்மா ஒருமுறை போதையில் சொன்னாள், அப்பா யாரென்று சொல்லவில்லை. எனக்கு அது தேவையாவும் இல்லை.

அம்மா, தன் சிநேகதனோடு வாழ்கிறாள். அப்படியொன்றும் நெருக்கமான சிநேகிதன் இல்லை, இப்போது கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் ஒரு "சீரியல்" நடிகையின் முன்னாள் கணவன். நடிகை, வேறொருவனோடு கட்டிலில் படுத்திருக்கையில் கண்டு சீறியவனை, போடாவென்று துரத்திவிட்டதாகவும், அவனுக்கு அடைக்கலம் தந்திருப்பதாகவும் யாரோ சொல்லி கேட்டதாக நினைவு. மனைவியினால் கைவிடப்பட்டவனுக்கு வாழ்க்கை தந்திருக்கும் கர்வம் அம்மாவிற்கு இருக்கலாம்.

பணம் தேவைப்படுகையில் என் மொபைலுக்கு அழைப்பாள், பணத்தோடு, லா மார்ட்டின் புல் ஒன்றையும் வாங்கி கொடுத்து வருவேன், வாய் நிறைய பல்லோடு வாங்கிகொ"ல்"வாள். எப்பவாது சாப்பிட்டியா என்று கேட்பதோடு சரி.

பணம் இல்லாத நாட்களில், என் குரல் தடுமாறுவதை வைத்தே நீயெல்லாம் எங்க உருப்பட போறே ன்னு சொல்லிட்டு போனை வைத்துவிடுவாள். கனிவான குரலில்லை கொஞ்சம் கரகர குரல்தான், நிதானித்து கேட்டால் மட்டுமே பெண் குரல் போன்றிருக்கும்.

அம்மா ஒருமுன்னாள் நடன நடிகை, உங்களுக்கு தேவையில்லை இருந்தாலும், இப்போதைய என் மன நிலையில் சொல்ல வேண்டும் போலிருக்கிறது, நேரமிருந்தால் கேளுங்கள், இல்லையெனில் கடந்துவிடுங்கள்.

நீக்கு, போக்கு தெரிந்திருந்தால் பெரிய நடிகையாக கூட வந்திருக்கலாம்.
எங்கோ வழுக்கியிருக்கிறாள் அதனால் தான் நடனத்தோடு நின்று போனது அவளது சினிமா வாழ்க்கை.

நடனத்தோடு நின்றுபோனாலும், சினிமாவின் முக்கிய புள்ளிகளுக்கு இவள் தான், பல நாள் இரவுத் துணை. இன்று, அப்பா வேடத்தில் வந்து புள்ளைகளுக்கு படத்திற்கு படம் ஒழுக்கம் சொல்லி கொடுக்கும், அந்த வழுக்கை தலை நடிகன் இவளின் மடியில் தவமாய் கிடந்தவனாம்.

அஞ்சு நாள் காத்துக்கெடந்து, ஆறாம் நாள் தான் போயிட்டு வந்தேன் தெரியுமா? அந்த அளவுக்கு உங்கம்மாவுக்கு அப்ப, டிமாண்டு ன்னு சொல்லிவிட்டு, ஒரே மடக்காய் பாதி குவாட்டரை உள்ளே தள்ளிவிட்டு மீசையை முறுக்கும் அந்த "ஸ்டைல் விக்" கடை பெருசை, பக்கத்திலிருக்கும் பீர் பாட்டிலை உடைத்து ஒரே சொருகலா சொருகத்தோணும். இப்படி கேட்டு கேட்டு மனது மரத்து விட்டமையால் ஒரு சிரிப்போடு விலகி வந்துடுவேன். இவராது இதோடு நிறுத்திகொள்வார், இன்னும் சிலர் வேறொரு எல்லைக்கும் சென்று வருவர், அவர்களுக்கும் சிரிப்பு மட்டுமே பதில்.

நடனத்திலிருந்த, நளினம் அவள் வாழ்க்கையில் இல்லாமல் போனதால், பழைய டெண்டு கொட்டா போல கேட்பாரற்று போய்விட்டாள் அம்மா.

பள்ளியில் சேர்த்தாள், படித்தேன், என்ன படித்தேன் என்று நினைவில்லை. பள்ளிக்கு போனது சரியாக நான்கு வருடம், அதில் என்ன கற்றுக் கொள்ள முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?

ஆங்கிலம் பேசுவேன், படிக்க தெரியாது, ஆனால் கையெழுத்து ஆங்கிலத்தில் தான். ஆங்கிலம் கற்றுக்கொண்டது பெரிய கதை, அதை சொன்னால் நிச்சயம் உங்களுக்கு போரடிக்கும் ஆகையால் இப்போதைக்கு அதற்கு தடா.

பெரிதாய் திட்டமிட்டு எதையும் செய்ய மாட்டேன். கடப்பவைகளையும், நடப்பவைகளையும் பற்றி பெரிதாய் அலட்டிக்கொள்ளாத மனிதப் பிறவியென்று வைத்துக் கொள்ளுங்கள்.

நிறைய நேரங்களில் சோறில்லாமல் பட்டினி கிடந்தமையால் இப்போதெல்லாம், சாப்பாட்டுக்கு செலவு பண்ணுவதில் கணக்கு கிடையாது. 
குடி வாரம் நான்குமுறை, சில நேரங்களில் வாரமுழுக்க வும் தொடர்ந்திருக்கிறது. இப்போதும் அப்படித்தான் தொடர்கிறது. 

சினிமா பார்ப்பது மிக அரிது, அதிலே கிடப்பதினால் அதன் மேல் நாட்டம் கிடையாது. 

வேலைகளற்ற பொழுதுகளில் அவளைத்தேடுவேன், அவளுக்கும் வேலையில்லை என்றால் என்னை தேடி வந்துவிடுவாள். அவளுக்கும் என்னை மாதிரி தான் குடும்ப அமைப்பென்று, எல்லாம் முடிந்த பிறகு பாதி மார்பகத்தை என் நெஞ்சில் அழுத்திக்கொண்டு சொன்னாள். என்னை அம்மா உதறிவிட்டாள் , அவள், கணவனை உதறிவிட்டாள். 

அவளை சந்தித்ததை பற்றி சொல்ல வேண்டுமானால், ரமேஷை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டி வரும், அவனைப்பற்றி நினைத்தாலே மண்டை வெடிக்குமளவிற்கு கோபம் சூடேறும். ஆகவே அவளை, கையாலாகாத கணவனின் மனைவியென்று வைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் கணவனை உதறிவிட்டு தனியாளாக வாழும் பெண்ணென்று வைத்துக்கொள்ளுங்கள். சினிமாவில் தான் இதுபோன்று சாத்தியம், நிஜவாழ்க்கையில் இருக்காது என்று எண்ணினால் அது உங்கள் அறிவீனமென்று சொல்வதை தவிர வேறு வழியில்லை எனக்கு.


அவளை திருமணம் செய்ய பல நேரங்களில் யோசித்திருக்கிறேன், என் எண்ணங்களை அவளிடம் சொல்ல முற்படுகையில் பேச முடியாதபடி வாய் முத்தம் கொடுத்து வாயடைத்து விடுவாள். 

அவள் பெயர் அவசியமில்லை. பெரும்பாலும் அவள் பகலில் தான் வருவாள், இரவில் ஓரிருமுறை தான் சந்திருக்கிறோம். அதுவும் வந்த அரை மணிநேரத்தில் அவசரமாக சென்று விடுவாள். காரணம் கேட்டதில்லை. அவளுக்கு முரட்டு அழகு. அந்த அழகுதான் அவளுக்கு பலமும், பலவீனமும்.

ஒரு மாதத்திற்கும் மேலாக அவளை பார்க்க முடியவில்லை, மொபைலில் தொடர்பு கொண்டால் அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்று பதில். ஒரு கன்னட பட வேலையாக மைசூருக்கு போகிறேன் வர பதினைந்து நாட்களாகும் என்று சொல்லிவிட்டு சென்றது தான் கடைசி என்று நினைக்கிறேன்.

அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று அரசு மருத்துவமனையில் சேர்த்து இன்றோடு 17 வது நாள். அதிக குடி கூடவே காமாலையும் இருப்பதினால் உடம்பு ரொம்பவே பாழ்பட்டிருக்கிறது. சரியாக இன்னும் ரெண்டு மாசமாகவது ஆகும் என சொல்லி இருக்கிறார் டாக்டர். கூடவே இருந்து பார்த்துக்கொள்ள முடியவில்லை என்பதால் அவளின் தத்துக் கணவனுக்கும், வார்ட் தொழிலாளிக்கும் பணத்தை கொடுத்து கவனிக்க சொல்லி விட்டு வருகிறேன். ரெண்டு நாளைக்கு ஒருமுறை பார்த்துவிட்டு வருவதோடு சரி.

"டங்காலி" டீக்கடையில் பேப்பரை புரட்டிக் கொண்டிருக்கையில் எதேச்சையாக தான் அந்த எட்டாம் பக்க கடைசி கால செய்தியை பார்த்தேன். உதவி இயக்குனர் ஒருவரோடு, மேக்கப் வுமன் தற்கொலை என்ற வரிகளை படித்ததும் தூக்கி வாரிப்போட்டது. அவளே தான், போட்டோ சற்று மங்கலாக தெரிந்தாலும், நன்றாக தெரிந்தது அவளின் முகம்.

அதற்கு மேல் பேப்பரை புரட்ட முடியாமல் மூடி வைக்க எத்தனிக்கையில் தான் அம்மாவின் தத்து கணவன் செல்போனில் அழைத்து சற்று முன்னர் உன் அம்மா இறந்துவிட்டதாக சொல்லி போனை துண்டித்தான்.
     

Post Comment

3 கருத்துரைகள்..:

aavee சொன்னது…

//அந்த வழுக்கை தலை நடிகன் இவளின் மடியில் தவமாய் கிடந்தவனாம்.//

அந்த வழுக்கைத் தலை நடிகர் Super ஆ நடித்த ஒரு star ஒ?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பலருக்கு மகிழ்ச்சி தரும் இவர்களின் வாழ்க்கை சோகமானது.

நல்ல கதை. பாராட்டுகள் அரசன்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான கதை! கிசுகிசுவெல்லாம் சொல்றீங்க! ஆவி தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கார்! கொஞ்சம் விம் போட்டு விளக்குங்க!