புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 15, 2015

இராஜதந்திரம் - வெற்றி முயற்சிஇந்த படத்தின் டீசரிலிருந்து ட்ரைலர் வரைக்கும் ஒரு  மர்மத்தை கடைபிடித்து வந்தார்கள். வழக்கமான சினிமா பாணியிலிருந்து விலகி சற்று மாறுபட்டே இருந்தது இவர்களின் விளம்பர யுக்தி. வெறும் டீசரை வைத்தே இதுதான் கதையென யூகித்துவிடும் இன்றைய சினிமா இரசிகர்களுக்கு சற்று சவாலாகத்தான் இருந்தது இந்த இராஜதந்திரம். ட்ரைலரில் மிரட்டிய பல சினிமாக்கள், திரையில் பப்படமாகிய அனுபவம் நிறைய இருப்பதினால் சற்று மிரட்சியாகத்தான் இருக்கையை ஆக்கிரமித்தேன். 

துவக்க சில காட்சிகளிலேயே படம் திரில்லர் வகையறா என்பதை சொல்லிவிட்டு அடுத்த காட்சி நகர்வுகளுக்கு சென்றது சிறப்பு. நாயகனாக வீரா அவர் நண்பர்களாக வரும் இருவர் கச்சிதமான தேர்வு. குறிப்பாக சிவா வின் தேர்வும் அவரின் வசனங்களும் அட்டகாசம். படத்தை கலகலப்பாக நகர்த்திச் செல்வதில் இவரின் பங்கு மிக முக்கியமாக இருக்கிறது. அப்புறம் ரெஜினா அறிமுகத்திலையே நெஞ்சை கொள்ளையடித்து விடுகிறார். 

இடைவேளைக்கு சற்று முன்பாகத்தான் கதை துவங்குகிறது. அதன்பிறகு விறுவிறுவென நகர்த்திச் செல்வதில் தெரிகிறது அறிமுக இயக்குநரான அமித்தின் உழைப்பு. தொய்வில்லாத திரைக்கதை இருந்தாலும் இரண்டாம் பாதியில் சற்று வேகம் குறைந்து மீண்டும் வேகமெடுக்கிற உணர்வை தருகிறது. 

சின்ன சின்ன தில்லுமுள்ளு செய்து பிழைப்பை நகர்த்தும் மூன்று நண்பர்கள், இவர்கள் தான் பிரதானமான பாத்திரங்கள். இவர்களை சுற்றி நிகழும் பல கிளைக்கதைகள்.   பத்து லட்சமென நம்பி ஒரு பையை திருடுவதும், ஆடுகளம் நரேனின் சிட்பண்ட் ஏமாற்றம், ரெஜினாவின் தந்தை தற்கொலை, பிறகு நரேனை ஏமாற்றி பணத்தை அபகரித்துக் கொண்ட நகைக்கடை அதிபரிடமே பிளானை சொல்லிவிட்டு நகையை கொள்ளையடிக்கும் தந்திரம் தான் "இராஜ தந்திரம்".

ஒவ்வொரு காட்சிக்கும் நிறைய உழைத்திருக்கிறார்கள் என்பது திரையில் தெளிவாக தெரிகிறது. வசனங்களிலிருந்து, காட்சிப்படுத்தும் முறைகளும் புதிதாக இருக்கிறது. போலீஸ் காட்சிகள் தான் சற்று நாடகத்தனமாக இருக்கிறது. மற்றபடி சின்ன சின்ன அசைவுகளில் நிறைய செய்திகளை உணர்த்தி இருக்கிறார்கள்.

ஹீரோயினுக்கு அதிக ஸ்கோப் இல்லாத படமென்றாலும் வரும் சில காட்சிகளிலே மனதை வசீகரித்து விடுகிறார் ரெஜினா. அதுபோல்தான் இளவரசும். இராஜ தந்திரம் "வீரா" என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறது அவரின் நடிப்பு. வழக்கமான அடிதடி, குத்து பாடல் இல்லாமல் ரசிக்க கூடிய அளவிற்கு படமெடுத்த இயக்குனருக்கும் அதன் குழுவிற்கும் நன்றிகளை சொல்லியே ஆகவேண்டும். ஒரே ஒரு பாடலை காட்சிப் படுத்திய விதமும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.   

நகைக்கடை அதிபரின் துணிச்சல், சினிமா போலீஸ், வீரா மற்றும் நண்பர்கள் திருந்தி ஜெயிலுக்கு போவது இப்படியான சிலதுகளை தள்ளிவிட்டு பார்த்தால் இந்த இராஜதந்திரம் தரமான சினிமா தான். அறிமுக இயக்குனர் அமித் அவர்களுக்கும் மற்றும் அவரது குழுவினருக்கும் பெரிய வாழ்த்துக்கள்.     
  

Post Comment

0 கருத்துரைகள்..: