புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 17, 2015

வன்மத்"தீ"...


பல ஆட்களிடம் வாங்கி நிறைய சேமித்துக் கொண்ட அனுபவங்கள் அதிகமிருப்பதால் பெரும்பாலும் பயணங்களில் பக்கத்து இருக்கை ஆசாமிகளிடம் பேசுவது கிடையாது, மீறி பேசினால் பொதுவான சம்பிரதாய பேச்சுக்களோடு நிறுத்திக் கொள்வேன். சில நேரங்களில் அவர்களை பேசவிட்டு நான் கேட்டுக்கொண்டு வருவதிலொரு  சுகானுபவம் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் தங்களின் வீர தீரங்களையும், ஆதங்கங்களையும் புலம்பித் தள்ளுவர். வெகு சிலரே நடப்பு விசயங்களைப் பேசி பல தகவல்களையும் நினைவுகளையும் விட்டுச் செல்வர். அப்படியொரு பயணச் சிநேகிதர் விலங்குகளைப் பற்றியும், அதன் குரூரங்களைப் பற்றியும் வகுப்பெடுத்ததினால் வந்த விளைவு இந்தப் பதிவு.

வன்மமற்ற உயிரிகளை காண்பது வெகு அரிது, ஏதோ ஒரு வகையில் வன்மத்தின் வெளிப்பாடு நடந்து கொண்டுதானிருக்கிறது. அதுவும் இந்த மனிதப் பாலூட்டிகளிடமிருந்து வெளிப்படும் வன்மம் கடும் மூர்க்கத்தனமாக இருக்கிறது. ஆழ்மனத்தின் அடியில் வன்மத்தை சுமந்து கொண்டு திரிகிறார்களோ? என்ற எண்ணம் அடிக்கடி எழும்பி மறைகிறது. நான் வன்மமில்லாதவன், தூயவன் என்று சொல்பவனை நான் மனிதனாகவே கருதுவதில்லை. ஒட்டு மொத்த வன்மங்களின் தொகுப்பாக மனிதனைத்தான் காண்கிறேன், இதில் நீ, நான் என்ற பாகுபாடு இல்லையென்பது என்னோட அழுத்தமான நம்பிக்கை. 

ஒவ்வொருவரிடமிருந்து வெளிப்படும் வன்மத்தின் அளவு வெவ்வேறானதாக இருக்கிறது என்றும், ஆறறிவை விட ஐந்தறிவு வெளிக்கொணரும் கோபம் தாங்கொணாத் தன்மையுடையது என்று முன்வைக்கும் பொதுக் கருத்தை முற்றிலும் மறுதலிக்கிறேன். வன்மத்தின் கோர முகம் அப்படியே தானிருக்கிறது அதை தூக்கி சுமக்கும் மனிதன் தான் மாறுபடுகிறான். என்னதான் தன்னை அறிவார்ந்தவனாக காட்டிக்கொள்ள முயன்றாலும், ஏதேனும் ஒரு சூழலில் தன்னிலை மறந்து சுயத்தினை வெளிப்படுத்தி விடுவது மனிதனின் பலவீனம். அங்குதான் வன்மம் தலைவிரித்து ஆடத் துவங்குகிறது.    

பெரும்பாலும் ஐந்தறிவு உயிரினங்களின் வாழ்க்கை முறைகளில் திட்டமிடுதலிருக்காது. இரை , இனப்பெருக்கம், ஓய்வு, மீண்டும் இரை இப்படித்தான் அதன் வாழ்க்கை சுழற்சி இருக்கிறதே தவிர அதிலிருந்து மாறுபடுவதில்லை. இந்த சுழற்சிகளில் இன்னொரு உயிரினத்தின் குறுக்கீடு இல்லாதவரை அதனிடமிருந்து வன்மம் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு தான். அப்படி ஏதேனும் இடர்பாடுகள் வருகையில் தான் தனது வன்மத்தை மிக உக்கிரமாக வெளிப்படுத்துகிறது, அதுவும் தற்காப்புக்காக மட்டுமே தான். சில உயிர்கள் தன்னை விட வலு குறைந்த இன்னொரு உயிரினத்தை கர்ண கொடூரமாக கொன்று உணவாக்கி கொள்வது வன்மமில்லை அது இயற்கை நிர்ணயித்த வரையறை. அதுவும் தன் தேவைக்கு மீறி வேட்டையாடுவதுமில்லை. 

நானறிந்தவரை மனிதன் மட்டுமே வன்மத்தை திட்டமிட்டு செய்து முடிக்கிறான் அல்லது செய்ய துடிக்கிறான். இதிலொரு வேடிக்கை என்னவெனில் மனிதன் சக மனிதன் மீதுதான் ஒட்டுமொத்த வன்மங்களையும் இறக்க முயலுகிறான். தன் வழியில் வருபவனை கொன்றுகொண்டே இன்னொருவனின் வழியிலும் இன்னலை ஏற்படுத்துவது தான் ஆறறிவின் அசாத்திய சாதனையாக இருக்கிறது. ஐந்தறிவு சக ஐந்தறிவின் மீது வன்மம் கொண்டு திரிவதில்லை, அவற்றை எப்படியேனும் முடக்க முயலுவதுமில்லை. அதனதன் வழியில் அமைதியாய் பயணித்துக் கொண்டிருக்கிறது, ஆறறிவு என்று பெருமையடித்துக் கொள்ளும் மனிதனின் மன ஓரங்களில் தான் வன்மக்கரை கொஞ்சமேனும் படிந்திருக்கிறது.

தன்னுடைய வலிமைகளை நிலைநிறுத்திக்கொள்ள படு மோசமாக களமிறங்கிவிட்ட மனிதன் அதற்காக எவ்வளவு பெரிய விலையையும் கொடுக்க தயாராகி விட்டான் என்றே உணர்த்துகின்றன பல நிகழ்வுகள். உணர்ச்சியின் மிகுதியினால் செய்துவிட்டேன் என்ற காலம் மறைந்து,  எந்த அவசரமுமின்றி  மிக நேர்த்தியாக திட்டமிட்டு செய்ததாக செய்தவர்களே ஒப்புக்கொள்வதை காண்கையில், தினசரி கைகுலுக்கும் ஒவ்வொரு மனிதனையும் பார்த்தால் மெல்ல அச்சரேகை உள்ளுக்குள் படரத் துவங்குவதை ஏனோ தவிர்க்க முடிவதில்லை. 

வன்மத்"தீ", கொழுந்துவிட்டு எரியத் துவங்குவதற்கு முன் கட்டுக்குள் வைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க, ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து அதற்கான சூழலில் வாழப் பழகுவது மட்டுமே அறிவார்ந்தவர்களின் செயல், இல்லையேல் அந்த பெருந்தீ பேரழிவை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 


Post Comment

3 கருத்துரைகள்..:

மெக்னேஷ் திருமுருகன் சொன்னது…

ப்ரோ ! அதெல்லாம் எப்போவோ அதிகரிச்சி பேரழிவ நோக்கி போய்ட்டே தான் இருக்கு ப்ரோ . சமரசம் என்ற சொல் , எழுத்தில் மட்டும் பயன்படாது மனதிலும் பயன்பட்டால் ஓரளவு வன்மத்தைக்குறைக்கலாம் .

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தீமையிலிருந்து விலகி / விலக்கி, நன்மையில் மட்டும் செல்வதே தான் அறிவு...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மனுஷன் வன்மத் தீ உள்ளவன்தான் அதைப் பத்த வச்சுக்கிட்டும் இருப்பவன்...நீங்க கடைசில சொன்னா மாதிரி சுய பரிசோதனை..மனுஷன் அதை எல்லாம் செய்யத் தொடங்கினா எல்லோரும் நல்லவங்களாகிட்டாங்கனா இந்த உலகமே இருக்காதுப்பா....ஆனா உங்க பதிவு நல்லாருக்குப்பா