புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூன் 08, 2015

காக்கா முட்டை...


நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் ஒரு மாற்று சினிமா இந்த "காக்கா முட்டை", இரண்டு சுள்ளான்கள் பண்ணும் அதகளம், படத்தின் முதுகெலும்பு. தேசிய விருது வாங்கிய பின்பு வெளியிட்டமையால் தான் பரவலான கவனத்தைப் பெற்று வெற்றியடைந்திருக்கிறது. அப்படியில்லாமல் படத்தை முன்னரே வெளியிட்டிருந்தால் வழக்கம் போல நல்ல சினிமாக்களுக்கு நேரும் கதியே தான் இதற்கும் நேர்ந்திருக்கும், இப்போது கிடைத்திருக்கும் வரவேற்பை பார்க்கையில் சற்று ஆறுதலாக இருக்கிறது. இது போன்ற முயற்சிகளை மக்கள் அரவணைக்க ஆரம்பித்தால் மட்டுமே நம்முள் புதைந்திருக்கும் ஏகப்பட்ட கதைகள் காட்சி வடிவம் பெற வாய்ப்பாக இருக்கும்!

மாநகரத்தின் மையத்தில் இருக்கும் ஏழ்மை வாசிகளின் ஏக்கங்கள் மிகுந்த ஆசைகள் தான் கதையின் மையமென்று சொல்லலாம். கதையென்று ஒன்றை மட்டும் குறிப்பிட்டு சொல்ல முடியாமல் போனாலும், திரைக்கதை ஆளுமையினால் படத்தை அவ்வளவு அழகாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.

இதுநாள் வரை,  அரசியல் ஆதாயத்துக்காக தீ வைத்து கொளுத்தவும், குப்பையில் பிறந்த நாயகன் குபேரனாக ஆனது போல் சிம்பதிக்காகவும், முதலாம், இரண்டாம் கட்ட ரவுடிகளின் வாழ்விடமாகவும் காட்டப்பட்ட அழுக்கு மனிதர்களின் வாழ்விடத்தை அவர்களின் உணர்வுகளோடு கட்டியிருக்கிறார் இயக்குனர்! வெறுமனே காட்டி இருக்கிறார் என்பது அபத்தம், ஆம் அவர்களின் கோபம், துக்கம், மகிழ்ச்சி, ஏக்கம், துரோகம் இப்படி அந்த மனிதர்களின் தினசரி வாழ்வியலை அதன் இயல்பு மாறாமல், நுணுக்கமாக காட்சிப் படுத்தியிருக்கிறார்.

எல்லாமும் எளிதில் கிடைக்க அனுபவித்து வாழும் மேல்தட்டு பையனையும், கோழி முட்டைக்கூட கிடைக்காமல் காக்கா முட்டை குடித்து வாழும் அடித்தட்டு வர்க்கத்தின் ஏற்ற தாழ்வுகளைப் பற்றி பேசாவிட்டாலும், சில காட்சிகள் உணர்த்துகையில் நெஞ்சம் நெருடுகிறது. நிதர்சனம் எப்பவுமே வலிக்கத்தானே செய்யும்.

வெளிப்பார்வைக்கு ஒரு குறுகிய வட்டம் மாதிரி தெரிகிறது இவர்களின் உலகம், ஆனால் உள்நுழைந்து பார்த்தால் மட்டுமே தெரிகிறது எவ்வளவு பெரிய ராட்சச உலகமென்று, அனுபவித்து வாழும் மனப்பக்குவத்தை இளம் வயதிலையே கற்றுக் கொள்ளுகின்றனர். சுற்றி இருக்கும் சூழலை கவனித்து அதற்கு தகுந்தாற் போல் சிரிக்கவோ, அழவோ செய்யும் மேல்தட்டு போலில்லாமல், தமது உணர்ச்சிகளை அப்படியே வெளிப்படுத்தி வாழுகின்றனர். எந்தவொரு இறுக்கத்தையும் வெகு சுலபமாக மாற்றிவிடக்கூடிய மனத்தெளிவு இவர்களிடம் மட்டுமே இருப்பதாக நம்புகிறேன்!

இந்த மாதிரி இடங்களை பார்க்கவே முகம் சுளிக்கும் பல நடிகைகளுக்கு மத்தியில் இப்படியொரு சூழலில் நடித்துக் கொடுத்ததற்காகவே ஐஸ்வர்யா ராஜேஷை வெகுவாக பாராட்ட வேண்டும். கச்சிதமான உடல் மொழி. திறமையான முயற்சிக்கு ஊக்கமாய் இருந்த இரு தூண்களான வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இருவரையும் தமிழ் சினிமா நினைவில் வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை! தரமான ரசனை நிறைந்த சினிமாவை வழங்கிய அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்!

========================================================================

நண்பர்கள் குழாமுடன் கேசினோவில், நேற்று "பண்டக சேஸ்கோ" என்ற தெலுகு படத்தை பார்த்தேன், அந்த சுகானுபவத்தை பெரிய பதிவாகவே எழுதவேண்டும் என்று உள்ளம் துடித்தாலும் உங்களின் நிலையை கருத்தில் கொண்டு அதற்கு தடா போட்டுவிட்டேன்.

அரைத்து, சலித்து, உளுத்து, மீண்டும் அரைத்து, சலித்த ஒரு கதையை எடுத்து ரசிகர்களை குஷிப் படுத்தியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் மண்டை காய்ந்தாலும், போகப் போக படத்தோடு ஒன்றிணைத்துக் கொண்டு தெலுகு ரசிகர்களாகவே மாறிவிட்டோம். சிவகாசிகாரனுக்கும், தென்காசிக்காரனுக்கும் இடையில் அமர்ந்து ரசித்த தெலுகு திருவிழாவை வாழ்நாளில் மறக்கவே இயலாது, அப்படியொரு சுகானுபவம்!    


   




Post Comment

4 கருத்துரைகள்..:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இந்தப் படம் பற்றி படித்ததெல்லாம் நல்ல படம் என்று சொல்லும் பதிவுகளே. தமிழகம் வரும்போது பார்க்க வேண்டும்....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இயக்குனர் மணிகண்டன் அவர்களுக்கு ஒரு சல்யூட்...!

வாத்தியார் இல்லாமல் "பண்டக சேஸ்கோ" கண்டிக்கிறேன்... ஹிஹி...

ஸ்ரீராம். சொன்னது…

இன்னும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…


காக்கா முட்டை எல்லோருமே நல்ல விமர்சனம் தருகின்றார்கள் பார்க்கணும்னு இருக்கு....

அட! சிவகாசியும், தென்காசியும் மட்டும்தானா?!!! கொங்குநாடு, மதுர எங்க போச்சு!!!?