புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 30, 2013

நான் தொலைத்த தீபாவளி...




காலரில் மஞ்சள் தடவிய புதுச்சட்டையோடு,  எண்ணெய் தேய்த்துக் குளித்த சுறுசுறுப்பில் வெடியின் காதை திருகி கொண்டிருக்கும் எதிர்வீட்டுச் சிறுவனிடம், இருபது  வருடங்களுக்கு முந்திய என்னை காண்கிறேன்! அவனின் பார்வையிலும், செய்கையிலும் எத்தனை சந்தோசங்கள் ஒளிர்ந்து மறைகின்றன. அவனுக்கு எதைப் பற்றிய பயமுமில்லை,அவனின் முழுக்கவனமும் வெடியென்ற ஒன்றின் மீது தான் நிறைந்திருக்கிறது. வெடியை பற்ற வைக்க படாத படுகிறான். சில வெடிகள் வெடிக்காமல் அவன் ஆர்ப்பாட்டத்திற்கு சில மணித்துளிகள் அணை போட்டாலும் அயர்ந்து போகாமல் அடுத்த நொடியே மீண்டுவிடுகிறான். மாடிப்படியில் அமர்ந்துகொண்டு அவனின் சந்தோஷத்தை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். 

இந்த வாழ்க்கையில் தான் எத்தனை மாற்றங்கள் மிக எளிதாய் நடந்தேறிவிடுகின்றன, நிறைய மாற்றங்கள் நமக்கு தெரியாமலே சன்னமாய் நம்முள் ஊடுருவி வெளியேறியும் விடுகின்றன. விரும்பியோ, விரும்பாமலோ நாம் சிலதுகளை அனுசரித்து போகத்தான் வேண்டியிருக்கிறது. வயது என்ற ஒன்று எவ்வளவு பெரிய  தாக்கத்தை மனிதருள் ஏற்படுத்துகின்றன என்பதற்கு எதிர்வீட்டுச் சிறுவன் ஒருவனே சாட்சி.வாழ்வின் வேக ஓட்டத்தினை தீர்மானிக்கும் காரணியாக வயதும் ஒன்றாக இருக்கிறது. 

பலகாரங்களை சாப்பிட அவனின் அம்மா அழைத்து ஆறு முறைக்கும் மேலாயிற்று, கொஞ்சம் கூட அவன் சட்டை செய்யவில்லை. வெடியை பற்ற வைப்பதும், வெடித்த காகிதங்களை கண்டு மலர்வதுமாக இருக்கிறான். இரண்டு வெடிகளுக்கு ஒருமுறை என்னையும் பார்த்து புன்னகை பூக்கிறான்.  குரலிட்டுக்கொண்டிருந்த அவன் அம்மா  இம்முறை வெளியே வந்துவிட இவன் வீட்டினுள் செல்ல, நினைவுகள் என்னை பின்னுக்கு இழுக்க தொடங்குகிறது.





ஏழு வயதிலிருந்து பதினைந்து, பதினாறுக்குள் தான் வெடிகளின் மீது வெறிக்காதல். ஒரு மாதத்துக்கு முன்பே தீபாவளி பற்றிய வண்ணக்  கனவுகளில் மிதந்து, எத்தனை வெடிகள், எவ்வளவு வாங்கவேண்டுமென்று பெரிய பட்டியலால் நிரம்பிவிடும்  வீட்டுப்பாட நோட்டின் கடைசி நான்கைந்து பக்கங்கள். தயாரித்து கொடுக்கும் பட்டியலில் கால்வாசி அளவு தான் அப்பா வாங்கி வருவார் என்று தெரிந்தும் பட்டியலிடுவதை நானும், பட்ஜெட்டை அப்பாவும் தளர்த்தியதில்லை. தீபாவளிப் புதுத் துணிகளின் மீதுகூட அவ்வளவு மோகம் இருந்ததில்லை, வெடிகளின் மீதும், அதன் ஒளி,  சத்தங்களின் மீதும் அவ்வளவு காதல். சில நாட்களுக்கு முன்பிருந்தே தீபாவளி களை கட்ட ஆரம்பித்துவிடும் குழந்தைகள் நிறைந்திருக்கும் வீடுகளில்.  

முதல் நாள் இரவே இந்த வெடியை, இந்த நேரத்தில் வெடிக்க வேண்டும் என்ற திட்டமிடலில் உறக்கம் தள்ளி போய் வழக்கமாய் எழும்பும் நேரத்தை விட தாமதமாக எழும்பி வெடியை தேடும் கண்களுக்கு தடை போடும் அம்மாவின் எண்ணெய் கிண்ணம். ஒருவழியாய் குளித்து வெடிகளை தொடச் சென்றால் நாலு பக்கத்துக்கு கண்டிப்பு கட்டளைகளை போடுவார் அப்பா. அதையும் கடந்து வெடித்து மகிழ்ந்த தருணங்களின் தடங்கள் இன்னும் மறையாமல் அப்படியே தான் இருக்கின்றன, என்ன காலமும் , நானும் கொஞ்சதாய் மாறியதாய் கவலை கொள்கிறது மனசு! சின்ன சின்ன மத்தாப்புக்கெல்லாம் பயந்து அப்பாவின் பின் ஒளிந்த காலத்திலிருந்து இன்றுவரை தீபாவளி தீபாவளியாகத்தான் இருக்கிறது. பருவமும், வாழ்வியலும் தான் அதிலிருந்து என்னை தனித்துவிட்டு, என் பின் சந்ததிகளை சேர்த்துக் கொண்டுவருகிறது.

பால்யமும், அதனுள் நிரம்பிய சேட்டைகளும், நந்தவனத்தில் உதிர்ந்து கிடக்கும் மஞ்சள் பூக்களாக மனம் முழுதும்  நிறைந்து கிடக்கிறது. அதை இரசிக்கத்தான் நேரமின்றி துரத்திக் கொண்டிருக்கிறது எந்திர வாழ்வு. வளர்ச்சியையும், அது தரும் போதையையும் சுவைத்து மகிழ, இதுபோன்ற எண்ணற்ற மின்மினிகளை விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. வளரும் பிள்ளையென்று அளவு சற்று கூடுதலாக எடுத்த புதுத் துணிக்குள் நான் புகுந்து கொண்டு, பலகாரம் சாப்பிட்ட எண்ணெய் பிசுபிசுப்போடும், கந்தக நெடியோடும் நண்பர்களோடு அன்று ஓடியாடிய அதே தெருவில் இப்போது என்னை ஓடவிட்டுருக்கிறேன், மீண்டு(ம்)  வர சில காலம் பிடிக்கும்! 


Post Comment

13 கருத்துரைகள்..:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அந்த சிறுவயது இனிய நினைவுகளை நினைக்க நினைக்க உற்சாகம் தொற்றிக் கொண்டது + மனதில் சொல்ல முடியாத பாரமும்...

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
சிறு வயது நினைவுகளை பகிர்ந்த விதம் அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சின்ன வயசு தீபாவளியோட சந்தோஷமே வேறதான்! இனிமையான நினைவுகள்! வாழ்த்துக்கள்!

கார்த்திக் சரவணன் சொன்னது…

என்னுடைய சிறுவயது நிகழ்வுகளை நினைக்கச் செய்தது இந்தப்பதிவு... காலை நான்கு மணிக்கே எழுந்து பல்கூடத் துலக்காமல் வெடி வெடித்த அனுபவங்கள் உண்டு... (ஆஹா உண்மைய உளறிட்டோமே.. பின்னாடி வர்றவங்க என்னென்ன கிண்டல் பண்ணப் போறாங்களோ தெரியலையே...)

ராஜி சொன்னது…

ஸ்கூல் பையன் கூறியது...
என்னுடைய சிறுவயது நிகழ்வுகளை நினைக்கச் செய்தது இந்தப்பதிவு... காலை நான்கு மணிக்கே எழுந்து பல்கூடத் துலக்காமல் வெடி வெடித்த அனுபவங்கள் உண்டு... (ஆஹா உண்மைய உளறிட்டோமே.. பின்னாடி வர்றவங்க என்னென்ன கிண்டல் பண்ணப் போறாங்களோ தெரியலையே...)
>>
பல் துலக்காம வெடிதானே வெடிச்சீங்க. பலகாரம்லாம் சாப்பிடலையே! அதுவரைக்கும் சந்தோசம்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

அழகான நினைவுகள்!
//பால்யமும், அதனுள் நிரம்பிய சேட்டைகளும், நந்தவனத்தில் உதிர்ந்து கிடக்கும் மஞ்சள் பூக்களாக மனம் முழுதும் நிறைந்து கிடக்கிறது.// மணம் மாறா நினைவுகள், அருமை!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் அரசன் - மலரும் நினைவுகளை அசை போட்டு ஆனந்தித்து - மனதில் பல மணி நேரம் உலவ விட்டு - கண் முன்னால் கொண்டு வந்து இரசித்து மகிழ்ந்தமை நன்று -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

உழவன் சொன்னது…

//பருவமும், வாழ்வியலும் தான் அதிலிருந்து என்னை தனித்துவிட்டு, என் பின் சந்ததிகளை சேர்த்துக் கொண்டுவருகிறது.//

உண்மை..சிறுவயது நினைவுகளை நினைவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி அண்ணா..

நம்பள்கி சொன்னது…

ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

Unknown சொன்னது…

இன்னும் அதையே நினச்சுகிட்டு ...சின்னபுள்ளதனமா இருக்கே !
த.ம 5

நம்பள்கி சொன்னது…

ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

சீனு சொன்னது…

அட அரசனா இப்படி ஒரு தீபாவளிப் பதிவை எழுதி இருப்பது, தீபாவளியைத் தொலைத்த ஒவ்வொருவருக்குள்ளும் மீண்டும் அந்த நாட்கள் வந்து செல்வது போன்ற காட்சி விவரிப்புகள் அரசன்.. அருமை அருமை

பால கணேஷ் சொன்னது…

I found my childhood days exactly in your every words arasan! Superb!