புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மே 06, 2014

ஓட்டுநர் உரிமம் வாங்கிய கதை ....


என்றோ நடந்திருக்கும், அந்த நேர கடுப்பில் மறந்திருப்போம். பின் வேலைகளற்ற ஒரு அழகிய வெட்டிப் பொழுதில் அசைபோடுகையில் மனத்திரையில் விரிந்து உள்ளம் உவகை கொள்ளும் நிகழ்வுகளாய் பசுமரத்தாணியாய் பதிந்துவிடும். இப்படி எண்ணற்ற நிகழ்வுகள் நம் எல்லோருக்கும் இருக்கும். அப்படி எண்ணற்ற நிகழ்வுகளில் பிரதானமான ஒன்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள நெஞ்சம் விரும்புகிறது.    

பெரம்பலூரில் தொடங்கிய என் படையெடுப்பு கடைசியாக சிங்கார சென்னையில் முடிவுற்றது என் ஓட்டுநர் உரிம வேட்டை. விரிவாக சொல்வதற்கு முன்பு வண்டி ஓட்டும் திறமையை? உங்களிடம் சொல்லவில்லையெனில் உறக்கம் வராமல் தவித்தாலும் தவிக்கும் சூழலுக்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதால் சொல்லிவிடுகிறேன்.

பக்கத்து ஊரில் சம்பத் மாமா பழைய டிராக்டர் வைத்திருந்தார், காடுகளில் மட்டுமே அதிகம் உழைக்கும் வண்டி எப்பாவது கப்பி சாலைகளை கண்டிருக்கும் அதன் சக்கரங்கள். அப்படி ஒரு உழைப்பாளிகள் வண்டியும் முதலாளி மாமாவும். கரும்புகையை வானோக்கி கக்கியபடி ஈரம் காய்ந்த வண்டல் மண்ணில் திணறி திணறி முன்னோக்கி நகர்ந்து கொண்டே, பின்னே  பற்கள் தேய்ந்த கலப்பை  பூமியை கோடிடும் அழகை காண கண்கள் கோடி வேண்டும். 

சில பல எடுபுடி வேலைகளுக்கு பலனாக வண்டியில் ஏற்றிக் கொண்டார் மாமா. வண்டியை விட பழசாய் ஒரு ரேடியோ செட் இருந்தது. வண்டியின் சத்தத்துக்கும், ரேடியோவுக்கும் எப்போதுமே போட்டி தான். இரண்டு சத்தங்களும் காதை பிளக்கும். ஆனாலும் மாமா சவுந்திரராசனையும், இளையராசாவையும் மதிய வெயில் மண்டையை பிளக்கும் நேரத்தில் கதறவிட்டு களிப்படைவார். வண்டியை கண்டதும் ஆர்வமுடன் ஏறிய நான் பிறகு ஆர்வமிழந்து விட்டதால் கிரிக்கெட் மட்டையை கையில் பிடித்து தாறுமாறாக சுழற்ற துவங்கிய காலம் அது! பள்ளிக் கல்வியும் முடிந்து நீண்ட விடுமுறை....

கோடை உழவுக்கு வந்தவர் கூப்பிட்டார், சாக்கு போக்கு சொல்லிவிட்டு மட்டையடிக்க கெளம்பிட்டேன். மறுநாள், வண்டி ஓட்ட கற்று தருகிறேன் என்றதும் வேதாளம் மீண்டும் டிராக்டரில் ஏறியது. சொன்னது போல் கற்று தந்தார். அதோடு இருந்திருந்தால் பிரச்சினை இல்லை. சில மாதங்களுக்கு பிறகு லைசென்ஸ் வா லைசென்ஸ் எடுக்க போகலாம். உனக்கு தான் வண்டி நல்லா ஓட்ட வருகிறதே என்று உசுப்பேத்தி ஒரு தறுதலை டிரைவிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டு வந்தார். 

சேர்ந்ததுமே LLR அப்ளை பண்ண ஒரு தொகை வாங்கி கொண்டு பாடமெடுக்கிறேன் என்கிற பேர்வழியில் கொலை செய்ய பார்த்தான். பிறகு கும்பலோடு கும்பலாக பத்து நாள் வண்டி ஓட்டவும் கொடுத்தான். அவ்வளவு தான் டெஸ்ட்க்கு வந்தா போதும் என்று சொல்லி அனுப்பிவிட்டு ஒரு மாதம் கழித்து போன் பண்ணினார். போனேன் அன்றும் ஏதும் சொல்லவில்லை சில போக்குவரத்து விதி முறைகளை சொல்லி கொடுத்துவிட்டு பயமில்லாமல் ஓட்டினால் போதும் உரிமம் உங்கள் கையில் என்று தெம்பூட்டி சென்றார். 

இரண்டாவது ஆளாக என்னை அழைத்தார் அதிகாரி, ஏறி அமர்ந்ததும் பேரை கேட்டார் சொன்னேன் வண்டியை எடுன்னார், எடுத்தேன் "S" வடிவ சாலையில் செல் என்றார், ஓட்டினேன் நடுங்கும் கரங்களை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தது நான் மட்டுமே அறிந்த இரகசியம். ஒருவழியாய் போய் நிறுத்தினேன். அதே மாதிரி "பின்னால் வா" என்று ஆபிசர் சொன்னதும் கண்ணெல்லாம் இருட்டிக்கொண்டு வந்துவிட்டது. "ரிவர்ஸ்" என்பது தான் எனக்கு பெருத்த தலைவலி. மாலையிடப்பட்ட ஆடாய் முழித்துக்கொண்டே சிக்கு கோலம் போட்டபடி வண்டியை வந்து நிறுத்தும் போது நான் நானாக இல்லை... 

அதிகாரி என்னை பார்த்து முறைத்ததுக்கு, இந்த ஜென்மத்தில் உனக்கு இங்கு லைசென்ஸ் கிடையாது என்பதின் அர்த்தம் விளங்கியது. இறங்கியவுடன் டிரைவிங் ஸ்கூல் அதிபர் ஓடிவந்து என்ன தம்பி உங்களுக்கு ரிவர்ஸ் வராதா ? என்று கேட்க எரிச்சலில் விழி பிதுங்கி நின்றேன். டிரைவிங் ஸ்கூல் வைத்திருப்பவன் கேட்டிருக்கணும், இல்லை நானாவது எனக்கு முன்னோக்கி மட்டுமே ஓட்ட தெரியும் பின்னோக்கி தெரியாது என்று சொல்லிருக்கணும். ரெண்டில் எதுவுமே இல்லையென்பதால் அடுத்த பாய்ச்சலுக்கு தயாரானேன், அதுவும் அவுட்டு. மொத்தம் நான்கு டெஸ்ட், பணத்துக்கு பணமும், மரியாதைக்கு மரியாதையும் போச்சி... நான்கில் ஒருமுறை கூட வெற்றிக்கனியை சுவைக்க முடியவில்லை.

சென்னை வந்த பிறகு மீண்டும் வேதாளம் வண்டி ஏறியது, இம்முறை மக்கள் பயணிக்கும் சாலையில் டெஸ்ட் , உள்ளுக்குள் பயம் கரை புரளத்தான் வண்டியில் ஏறினேன், ஆனால் முன்னோக்கி மட்டும் என்பதினால் கொஞ்சம் பயமில்லை. ஒருவழியாக "வெற்றிக்கோட்டை" தொட்டு உரிமத்தையும் வாங்கிவிட்டேன். தேசியக்கொடியை போல் சட்டைப்பையில் குத்திக் கொள்ளாத குறைதான் அந்த அளவுக்கு வெற்றிக் களிப்பில் திரிந்தேன் நான்கைந்து நாட்கள்.  

ஒரு மாதம் கழித்து டிராக்டர் மாமா ஊரிலிருந்து போன் பண்ணி, டேய் எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டேன், அடுத்த வாரம் வந்திடு, இந்த முறை லைசென்ஸ் வாங்கிடலாம் என்று சொல்ல, நான் பொறுமையாக லைசென்ஸ் சென்னையில் வாங்கிட்டேன், வேண்டுமென்றால் சொல்லுங்கள் நம்ம டிராக்டரில் ரிவர்ஸில் ஒரு ரவுண்டு போயிட்டு வருவோம் என்றதும் மவுனமாக போனை துண்டித்தவர் அதன் பிறகு வெகு காலத்துக்கு போன் பண்ணவே இல்லை ..... உங்கள் யாரிடமாவது வண்டி இருக்கா சொல்லுங்கள் ரிவர்ஸில் ஒரு ரவுண்டு போய் வரலாம் ...............



Post Comment

8 கருத்துரைகள்..:

பால கணேஷ் சொன்னது…

ரைட்டு... சாலிக்கிராமத்துல ஒரு வண்டி வாடகைக்கு எடுத்துக்கிட்டு ரிவர்ஸ்லயே ஓட்டி கிண்டி போயிரலாம். ரெடியா இரும் அரசரே...!

பால கணேஷ் சொன்னது…

அப்பப்ப மலரும் நினைவுகளைப் பகிர்கிற சாக்கில் கடந்த காலத்தில் உலவிவர எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் உங்கள் அனுபவமும் ரொம்பவே ருசித்தது ராஜா.

சீனு சொன்னது…

சீர்மிகு தோழர் அரசன்,

மூன்று நான்கு ஐந்து அப்புறமா முதல் பாரா, அதன் பின் ஆறாவது பாராவில் இருந்து கடைசி பாரா என்று பதிவின் கட்டமைப்பு இருந்திருந்ததால் இன்னும் வெகு ஜோராய் இருந்திருக்கும். இரண்டாவது பாரா மொத்தமாய் தேவையில்லை, அதில் கூற வந்ததை வேறு எங்காவது கோர்திருக்கலாம்

மூன்றாவது பாராவில் இருந்து மட்டும் பதிவைப் படித்தால் சிறிது கூட அலுப்பு தட்டாத டாப் கிளாஸ் பதிவு.

நன்றி
அரசனின் தொண்டன்

ஜீவன் சுப்பு சொன்னது…

//சீர்மிகு தோழர் அரசன்//


உனக்கெல்லாம் பொண்ணு கொடுத்ததே அதிகம் இது சீர் வேறாயான்னு சொல்லிவிட்டார்கள் என் மாமனார் வீட்டில் .அதனால , மிகுதியாக சீர் வைத்திருந்தால் நேக்கு கொஞ்சம் அனுப்பிவைக்கவும் . மீ பாவம் ...!

ஜீவன் சுப்பு சொன்னது…

முதல் பத்தி அழகு .. ரெண்டு மூணு வாட்டி வாசிச்சேன் ...

//பெரம்பலூரில் தொடங்கிய என் படையெடுப்பு கடைசியாக சிங்கார சென்னையில் முடிவுற்றது என் ஓட்டுநர் உரிம வேட்டை.//

கோர்வையற்று இருக்கேய்யா ...
ஓட்டுநர் உரிமைக்காக பெரம்பலூரில் தொடங்கிய என் வேட்டை சிங்கார சென்னையில் முடிவுற்றது.. இப்டி இருந்திருக்கலாமோ ?

ஜீவன் சுப்பு சொன்னது…


//ஒரு தறுதலை டிரைவிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டு வந்தார். //

ஒரு "தறுதலையை " டிரைவிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டு வந்தார் இப்டித்தானே வாசிக்கணும் ... இல்லையா ?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல அனுபவம் தான்....

சுவைபடச் சொல்லி இருக்கீங்க அரசன்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சுவையான அனுபவ விவரிப்பு!நன்றி!