எல்லோரிடமும் ப்ரியம் காட்டினாலும்
என்மேல் கூடுதல் பாசம்
என்னைவிட
பதினைந்து வயது மூத்தவளாகிய
உனக்கு!
கண்ணாமூச்சியிலிருந்து,
களவு வரை எல்லாம்
நீ
சொல்லித்தந்த வித்தை!
குறி தவறாமல்
அடித்த மாங்காய்க்கு
பரிசாக,
முத்தச்சுவை ஊட்டியவள்!
தேனடையென்று
குளவி கூட்டினுள் விரலிட்டு
எனக்கு முகம் வீங்க,
உனக்கு
அழுதே கண் வீங்கியதாம்!
கம்மங்கதிரொடிக்க,
கன்றுக்கு புல்லறுக்க,
முனியப்பருக்கு விளக்கேற்ற,
இப்படி எங்கு சென்றாலும்
உன்துணை நான்தான்!
மருதாணி விரல் பிடித்து
மரிக்கொழுந்து கிறக்கத்துல
மயங்கி நடந்த நாட்களெல்லாம்
மனசெல்லாம் நிறைந்து கிடக்க,
தூக்கிட்டு கொண்டதாய்
உன்னை கிடத்தியிருந்தார்கள்
கால் நொடிக்கும்
அந்த மரப்பெஞ்சில்!
சாணம் கரைத்த கையோடு
மார்பிலடித்துக் கொண்டு
அழுத அம்மாவோடு சேர்ந்து நானும்
கதறியதாய் அடிக்கடி,
நினைவுறுத்துவாள் உன் அம்மா!
இன்றுவரை,
நானறிந்த இரகசியம்
ஊரறியாது.
இன்னும் எத்தனை
இரவுகளின் உறக்கங்களை
விழுங்கப் போகிறதோ,
அந்த அந்தியின்
கண்ணீர்பேச்சும்
அதனுள் கரைந்த போன
உன் ஒருதலைக்காதலும்!
Tweet |
7 கருத்துரைகள்..:
நெஞ்சம் கரைய வைத்த கவிதை! வாழ்த்துக்கள்!
மனதை கணக்கச் செய்தது கவி.
வலி நிறைந்த கவிதை அரசன்.
மனம் கனக்கச் செய்யும் கவிதை..
அருமை சகோ
மனம் கனக்கச் செய்யும் கவிதை..
அருமை சகோ
சோகம் ததும்பும் கவிதை.கலங்க வைத்துவிட்டீர்கள் அரசன்
நெகிழ்ந்தேன்...
கருத்துரையிடுக