உடைகளின் மீது பெரு விருப்பம் இருந்ததில்லை. துணிக்கடையிலும் அதிக நேரம் செலவழித்ததில்லை. நீ, மொத்தமாய் பத்து நிமிஷம் கடைக்குள் இருந்தாலே அது ஆச்சர்யம் என்று அடிக்கடி நண்பர்கள் சொல்வார்கள். இந்த ஜென் நிலைக்கு ஒரே ஒரு காரணம் தான், அது என்னோட "வெட்கம்" தான், அட, நீங்க நம்பித்தான் ஆகணும் வேறுவழியில்லை. இப்போ அப்படியில்லை ரொம்ப மாறிட்டேன், இதையும் நீங்க நம்பித்தான் ஆகணும்.
நான் பத்து படித்துக் கொண்டிருக்கையில் உள்ளாடைகள் எடுக்க வேண்டி எங்கள் பகுதியின் பெரியக் கடைக்கு? சென்றிருந்தேன். ஆண்கள் பகுதியில் ஒரு அண்ணன் தான் நிற்பார், சுருட்டை முடி, மாநிறத்தில் இருப்பார். குரல்மட்டும் ஏதோ ஒரு பழைய பாடகரை நினைவுபடுத்தும். அவரைப் போன்ற தோற்றமுடைய சினிமா நடிகன் எவருமில்லை இருந்திருந்தால் உங்களுக்கு உ.ம் சொல்லியிருப்பேன்.
ஆடிமாத தள்ளுபடி விலையை சொல்லியபடி ஒவ்வொரு கிராமமாக வலம்வரும் அந்தக் கடையின் விளம்பர ஆட்டோவில் முதன்மை ஆலோசகர் போன்று அமர்ந்து கொண்டு பிட் நோட்டிஸ்களை விசிறியபடி மைக்கில் கரகரத்துச் செல்வார். வீதியில் ஏதேனும் தாவணியோ, சுடியோ கண்ணில் பட்டுவிட்டால் நான்கைந்து நோட்டிஸ்கள் கூடுதலாக விழும்.
திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு துணியெடுக்க வந்து தடுமாறும் பலருக்கு இவர்தான் ஆபத்பாந்தவன். எல்லோருக்கும் முகம் சுளிக்காமல் பதில் சொல்வார். பெண்களென்றால் கூடுதல் நளினமிருக்கும் இவரது பேச்சில். விற்காத ரொம்ப காலத்திய சேலைகளையும், சுடிகளையும், அப்போதைய வெற்றிப் படத்தின் பெயரை சொல்லி அந்த நடிகை, ஒரு காட்சியில் இந்த மாதிரி புடவையை கட்டியிருந்தார் என்று கதையளக்க வந்த சனங்களும் உண்மையென நம்பி, இரண்டுக்கு மூன்றாய் வாங்கிப் போவதினால் முதலாளியிடம் தனி செல்வாக்கு. ஆளுக்கு தகுந்த மாதிரி பேசுவதைக் கண்டு முதலாளியே சற்று மிரளுவார்.
நான் கடைக்கு சென்றிருந்த நேரம் அந்த அண்ணனை காணோம், அவருக்கு பதிலாக ஒரு தாவணி நின்றுகொண்டிருந்தது. என்ன வேணுமென்று அந்த தாவணி கேட்க, @#$#@! அண்ணன் இல்லையா என்று கேட்டுக்கொண்டே திரும்புகையில் தான் கவனித்தேன், நம்மாளு மும்முரமாய் ஜாக்கெட் பிட்டொன்றை நறுக்கி கொண்டிருந்தார்.
அவர் இப்போதைக்கு வர மாட்டார் என புன்முறுவலோடு சொல்லிவிட்டு, உங்களுக்கு என்ன வேணும் னு சொல்லுங்க நான் எடுத்து காட்டுறேன் என்று சொல்ல, தயங்கி தயங்கி நிற்கும் என் முகக் குறிப்பறிந்து அதுவாகவே, கேட்க, நான் தலையை ஆட்ட, எடுத்துப் போட்டதில் ஒன்றை எடுத்துக்கொண்டு அவசரமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டேன். அன்றைக்கு அர்த்தம் விளங்காத அந்த தாவணியின் சிரிப்புக்கு அடுத்த மூன்று வருடத்தில் அர்த்தம் விளங்கிற்று,
இன்றைய இளசுகள், 'காண்டத்தையே' ஜாலியாக வாங்கிச் செல்வதை பார்த்தால் அன்றைக்கு வெறும் உள்ளாடைக்கு நான் பண்ணிய கோமாளித்தனத்தை என்ன வகையில் சேர்ப்பது என தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறேன்!
ஊர்ப்பகுதியில் பத்துக்கு பத்து அளவிலான கடைகளையே கண்டு வந்தவனுக்கு, சரவணா போன்ற பெரு வணிக கடைகளை கண்டதும் ஏற்பட்ட பிரமிப்பை எப்படி சொல்வது என தெரியவில்லை. சென்னை வந்திருந்த புதிதில் ஏதும் வாங்கவில்லை என்றாலும் கூட வெறுமனே சென்று சரவணா மற்றும் அதை சுற்றியிருக்கும் சில கடைகளுக்குள் புகுந்து நோட்டமிடுவதை வழக்கமாய் வைத்திருந்தேன். அதன் பிரமிப்பை இப்போதைய மால்கள் உடைத்துக் கொண்டுவருகிறது. மாலின் பிரமிப்பை உடைக்க என்ன வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
சொல்ல மறந்துட்டேன், சென்ற வாரம் ஊருக்கு சென்றிருக்கையில் தான் கவனித்தேன், அந்த ஜவுளிக் கடைக்கு பக்கத்திலேயே டைலர் கடை வைத்திருக்கிறார் அந்த அண்ணன். கடையின் பிரமாண்ட போர்டில் பாவாடை தாவணியில் புற முதுகை காட்டியபடி ஸ்ரீதிவ்யா சிரித்துக் கொண்டிருக்க, லேடிஸ் ஸ்பெசல் என்று அடைப்புக்குறியில் எழுதியிருந்தது.
Tweet |
5 கருத்துரைகள்..:
நினைவலைகள் மூலம் அருமையாக ரசிக்க வைத்தீர்கள் நண்பரே....
தமிழ் மணம் 1
வெகு சீக்கிரத்தில் அண்ணன் "ஜவுளிக்கடை" தான்...
இனிமையான நினைவுகள்.....
அழகான யதார்த்தமான எழுத்து. ஒரு சின்ன விஷ்யத்தையும் சுவாரசியமாக சொல்ல முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்
வாழ்த்துக்கள்
எப்படிங்ணே சின்ன விஷயத்தையும் இவ்வளவு இன்ட்ரஸ்ஸடிங்கா , ரசிச்சு படிக்கறமாதிரி எழுதுருங்க ? சொல்லிக்கொடுத்த நானும் முயற்சிப்பேனே !
கருத்துரையிடுக