புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 14, 2014

நினைவுப் பாசிகள் # 03.14. 2014




பாசி # 1:

எப்படி இலாவகமாக நடந்தாலும் "கிளுக்", "கிளுக்" என்று சத்தம் போட்டு காட்டி கொடுத்துவிடும் கால் சட்டையின் இரண்டு பக்க பைகளில் கனத்து தொங்கும் கோலிக்குண்டுகள்! சின்னது ஒரு பக்கமும், பெரியது இன்னொரு பக்கமுமாய் வகைப்படுத்தி தனித்திருக்கும். 

பூ வைத்தக் கோலியின் மீது தீராக்காதல், கிறங்கடிக்கும் அதன் அளவும், அழகும்! எத்தனை வேளை என் உணவுகளை மறக்கடித்திருக்கும் இந்த பூக்கோலி! காணும் எல்லாப் பெண்களின் மீதும் ஈர்ப்பு வராதல்லவா ? அது போலத்தான் எல்லாக் கோலிகளையும் பிடிக்காது. எனக்கு பூ கோலியின் மீது கொள்ளைக் காதல்!

என் வருகையை இதன் சத்தம் வைத்தே கண்டு பிடித்துவிடுவாள் முத்தம்மாள் பாட்டி! கையை கழுவிட்டு வாடான்னு சொல்லி திட்டிக்கொண்டே "உரி" யிலிருக்கும் சோத்துப் பானைகளை இறக்குவாள்! பாதி பசி அடங்குமுன்னே மீண்டும் வேதாளம் வரும் நண்பன் உருவில்!

டேய் ராசா, கண்ணன் நிறைய பூக் குண்டு வைச்சிருக்கான் விளையாட கூப்பிடுறான். வருவியான்னு கேட்பதற்குள் கெழவி ரெண்டு "கீர்த்தனைகளை" முடித்து மூன்றாம் கீர்த்தனையை தொடங்கியிருப்பாள்! சொல்ல வந்தவன் இருக்க மாட்டான்னு திரும்பாமலே தெரியும்!



தெளிவான ஊதா வண்ணத்தினுள் சிறிய தேங்காய் துணுக்கை திணித்து செய்தது போல் செய்யப்பட்ட, சிறிய வகை கோலியின் மீது ஏற்பட்ட ப்ரியம் இன்னும் குறைந்த பாடில்லை! (பின்னே முதல் காதல் அல்லவா ?) எங்காவது காண நேரிட்டால் சில நொடிகள் என்னை மறந்து விடுகிறேன்! 

இப்படி சேமித்து வைத்திருந்த "காதலிகளை" ஒரு நாள் அப்பாவுக்கு பயந்து, வீட்டை சுற்றி குழி பறித்து அதனுள் போட்டு மூடி வைச்சிட்டு, விடுதிக்கு படிக்க போயி ஆறு மாசம் கழிச்சி வந்து பார்த்தா புதைத்த இடமும் புரியல, காதலிகள் போன தடமும் தெரியல ......

பாசி # 2:

காந்த விளைவுகளை பற்றி படிக்கும் முன்பே காந்தத்தின் மீதான சிநேகம் மிக அதிகம். பக்கத்து வீட்டு அண்ணன் ஒருவர் வைத்திருந்த, சிறு வளைய வடிவக் காந்தம் ஒன்றை கண்டு முகம் மலர்ந்த நான் நமக்கொன்று அது மாதிரி கிடைக்காதா என்று ஏங்குமளவிற்கு செய்த வஸ்து அது!

எங்கண்ணே, இது கிடைச்சது என கேட்டு, அந்த புத்திசாலி அண்ணன் ஓடிக்கொண்டிருக்கும் இரயில் சக்கரத்தை கல்லால் அடித்தால் காந்தம் கொட்டும் அப்படித்தான் நான் எடுத்து வந்தேன் என்று சொல்ல, ரயில் சக்கரத்தை கல்லால் அடிக்க, என் முதுகில் அப்பா கம்பால் அடிக்க பெரும் கலவரம் நடந்தது தான் மிச்சம். காந்தம் கிடைத்த பாடில்லை! 

சிறு துணுக்கு காந்தம் ஒன்றை நண்பன் ஒரு ரூபாய் சொல்ல நான் அம்பது காசு, சின்ன வெள்ளக் கட்டி ஒன்றுக்கும் பேசி முடித்தேன், அப்படித்தான் காந்தம் பற்றிய என் ஆராய்ச்சி தொடங்கியது!

அதன் பின் அதை ஒரு நைலான் கயிற்றில் கட்டி தெருவெல்லாம் இழுத்து வந்து, என் சோதனைக் கூடத்தில் செய்த ஆராய்ச்சிகளை, பின்னர் நிறைய பத்திரிக்கைகள் போட்டிப் போட்டுக்கொண்டு எழுதிய கட்டுரைகளை நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் ! 

Post Comment

16 கருத்துரைகள்..:

வெற்றிவேல் சொன்னது…

அதுக்கு ஒரு பொற்காலம் அண்ணா...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய நினைவுகள் ஞாபகம் வந்தது...!

r.v.saravanan சொன்னது…

சிறு வயது நினைவுகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது அரசன் தொடர்ந்து இது போல் நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அது ஒரு கனாக்காலம்......

ஒரு டப்பா நிறைய கோலிகுண்டுகள் வைத்திருந்தேன்..... பிறகு யாருக்கோ எடுத்துக் கொடுத்துவிட்டார் அம்மா!.... :(

ராஜி சொன்னது…

பொண்ணாய் பொறந்ததால கோலிக் குண்டு மேட்டர் தெரியாது.

ராஜி சொன்னது…

பொண்ணாய் பொறந்ததால கோலிக் குண்டு மேட்டர் தெரியாது.

ராஜி சொன்னது…

ரயில் வரும்போது தண்டவாளத்துல பழைய அலுமினிய பத்து பைசாவை வச்சு அது மேல ரயில் ஏறி இறங்குனா அது காந்தமாயிடும்ன்னு எனக்கு சொல்லி, நம்பி இருக்கேன்.

கார்த்திக் சரவணன் சொன்னது…

செம நினைவுகள்... நான் விளையாடிய கோலி விளையாட்டு ஞாபகம் வந்தது... அது ஒரு பொற்காலம்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

கிராமத்து வாழ்க்கைக்கு மட்டுமே சொந்தமான வாழ்க்கை...

மனசு பின்நோக்கி பறக்கிறது

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பசுமையான பாசிகள்! சிறியவயது நினைவலைகள்! இப்போது இருக்கும் நகரத்துச் சிறார்கள் தொலைத்து விட்ட பாசிகள்!

நல்லதொரு பகிர்வு!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

கோலி மீது அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை! காந்தங்கள் என்னையும் ஈர்த்தன. அப்பா ரேடியோ மெக்கானிசம் செய்ததால் சில ஸ்பீக்கர்கள் உடைபட்டு நான் உதைபட்டு இருக்கிறேன்! நல்ல பகிர்வு! நன்றி!

ஜீவன் சுப்பு சொன்னது…

அழகழகான பாசிகள் ...

மாதேவி சொன்னது…

இனிய நினைவுகள்.
சகோதரர்களுடன் பிறந்ததில் சிறுவயதில் எனக்கும் கோலிமீதுகாதல்.

உழவன் சொன்னது…

பால்யகால பசுமையான நினைவுககள் நிறைந்த பதிவு ...அண்ணா..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ரூபக் ராம் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கனவு மெய்ப்பட

வலைச்சர தள இணைப்பு : பனியைத் தேடி - மலைப் பயணம்

அமுதா கிருஷ்ணா சொன்னது…

ஓ காந்த கட்டுரை ஆசிரியர் நீங்க தானா?