புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஏப்ரல் 16, 2014

நினைவுகள் ...


னிதர்களின் நெஞ்சுக்கூட்டுக்குள் உறங்கி கொண்டிருக்கும் நினைவுகளுக்கு எண்ணிக்கை என்ற கடிவாளம் என்பதே கிடையாது. ஏக்கம், ஏமாற்றம், கனவு, கண்ணீர், குரோதம், இன்பம் இது போன்ற நிறைய இத்யாதிகளினால் சூழப்பட்டு எப்பொழுதுமே நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் ஒரு வேடிக்கை+ஆச்சர்யம் கலந்த ஒரு படைப்பு தான் மகத்தான இந்த மனிதப் படைப்பு. நினைவுகள் எனும் தூண்டிலில் விரும்பி அகப்பட்டு பின் விடுபட்டுக்கொள்வதை என் வாடிக்கையாக வைத்துக் கொண்டுள்ளேன். 

குப்பையை கிளறி இரை தின்னும் கோழிகள் போல, நினைவுகளை கிளறி கிளறியே என்னை புதுப்பித்துக் கொள்கிறேன். வெறும் இரவுகளாக கழிய வேண்டியதை கவித்துவமாகவும், கவித்துவமாக கழிய வேண்டிய இரவுகளை கவலைகளாக்கவும் இந்த நினைவுகளால் மட்டுமே சாத்தியம். மாலை நேர மழைச்சாரல் போன்றது தான் நினைவுகள். சிலர் அதை இரசித்து மகிழ்வர், சிலர் எரிச்சலில் எரிந்து விழுவார்கள். சாரல் என்பது என்னவோ ஒன்று தான், அதை எடுத்துக்கொள்ளும் மன நிலைகள் தான் மாறுபட்டு நிற்கின்றன. எனக்கு எப்போதுமே மழைச்சாரல்(நினைவுகள்) மகிழ்ச்சியை அள்ளித்தரும் அட்சய பாத்திரமாகவே இருக்கிறது...

மனிதர்களுக்கு முரட்டு குணமொன்று உண்டு, என்னவெனில் சரியான நேரத்தில் மிகச்சரியாக எந்தவொரு செயலையும் செய்ய மாட்டார்கள், காலம் கடத்தியே பழக்கப்பட்டவர்கள் நாம். இப்படி தவறிய செய்கைகள் நினைவுகளாய் சேர்ந்து விடுகின்றன. நினைவுகள் ஒன்றும் உருவாக்கப் படுவதில்லை, நம் செய்கைகளின் , உணர்வுகளின்  எச்சங்கள் தான் நினைவுகளாக உருமாறி, பின் உயிர் பிசைவது. 

உறக்கம் தொலைந்த பின்னிரவுகளில் நினைவுகளை அசை போடுவது அமிழ்த சுவை, இருந்தும் பல பின்னிரவு தூக்கங்களை தின்று செமித்திருக்கின்றன இந்த நினைவுகள் எனும் அரக்கன். காலங்களும், சூழலும் தான் நிர்ணயிக்கின்றன அரக்கனையும், அமிழ்தையும்! கடந்த காலங்களை மீட்டிப் பார்ப்பது அலாதியானது, ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னும் நிறைய வலிகளின் கறுப்பு ரேகைகள் படந்திருக்கும். வெற்றிக்குப் பிந்திய நினைவுகள் தோல்வியின் இரணங்களை சொல்லிக்கொண்டே இருப்பதினால் வெற்றியின் முக்கியத்துவம் மனதை விட்டு அகலாது.

நினைவுகளற்றவன் மனிதனாக இருக்க முடியாது. பார்ப்பதற்கு இலகுவாக தெரியும் சிறிய நிகழ்வுகள் கூட பெருஞ்சுமை கொண்டு அழுத்தும் நினைவுகளாக மாறிய கதையும் உண்டு. என்னதான் வேகங்கொண்ட மட்டும் ஓடினாலும் பிற்காலத்தில் அசைபோட சில அழகிய நினைவுகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் ....


Post Comment

6 கருத்துரைகள்..:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நினைவுகள் பொக்கிஷம் போன்றவை! சிறப்பாக நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி!

சீனு சொன்னது…

இராசா அவர்களுக்குள் ஒரு இலக்கியவாதி பிரவாகம் எடுத்துக் கொண்டுள்ளான் :-) ஆகட்டும் ஆகட்டும் சீக்கிரம் எமக்கு வகுப்பெடுக்கவும்

Seeni சொன்னது…

ஆமாம்...

அம்பாளடியாள் சொன்னது…

சில மறக்க முடியாத நினைவுகள் தான் எம்மை இப்போதும் வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது அது போன்ற சில நினைவுகளை பொக்கிசப் படுத்தி வாழ்வதே சிறப்பு .
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .

கார்த்திக் சரவணன் சொன்னது…

யோவ் ராசா, வார்த்தைகள் கடினமாக இருக்கே... அடுத்த இலக்கியவாதி ஆகும் எண்ணம் இருக்கோ?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நினைவுகள்......

பல சமயங்களில் மகிழ்ச்சியையும் சோகத்தையும் சேர்ந்து தரக்கூடியவை.....